இயக்குனர் எவ்வளவோ சொல்லியும் நடிக்க மறுத்த சிவாஜி... ஆனா அவர் கணிப்பு சரிதான்..!
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது மலைக்கள்ளன். ஆனால் அந்தப் படத்தின் இயக்குனர் ஸ்ரீராமுலு நாயுடு முதலில் கதாநாயகனாக தேர்வு செய்தது சிவாஜிகணேசனைத் தான்.
அந்தப் படத்தின் கதையோடு சிவாஜியை சந்தித்த ஸ்ரீராமுலு நாயுடு உங்க நடிப்புக்கு முழுமையாகத் தீனி போடக்கூடிய கதை. இந்தப் படத்துல நடிச்சீங்கன்னா எங்கேயோ போயிடுவீங்கன்னு சொன்னார்.
அந்தக் காலகட்டத்துல சிவாஜி பல படங்களில் நடித்துக் கொண்டு இருந்தார். ஒரு நாளைக்கு 3 ஷிப்டா படங்கள் நடிச்சிக்கிட்டு இருந்தார். நானே நினைச்சாக் கூட இப்ப உங்க படத்துல என்னால நடிக்க முடியாது என்று சொல்ல சரி. நான் ஒரு மாதம் கழித்து திரும்பி வர்றேன் என்று சொல்லி விட்டு சென்றார்.
அதே போல மீண்டும் திரும்பி வந்தார். 'கதையை மட்டும் ஒரு முறை படிச்சிப் பாருங்க. நீங்க உடனே நடிக்க சம்மதிச்சிடுவீங்க'ன்னு டைரக்டர் சொல்றாரு. 'உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா. நீங்க பிரமாதமாகத் தான் கதையை அமைச்சிருப்பீங்க.
கதையை நான் படிச்சேன்னா இந்தக் கதையில நடிக்க முடியலையேன்னு எனக்கு வருத்தம் வரும். நான் ஒரு யோசனை சொல்றேன். எம்ஜிஆர் அண்ணன்கிட்ட கேட்டுப் பாருங்க. அவரு நடிச்சாருன்னா இந்தப் படம் நிச்சயமா வெற்றிப்படமா அமையும்' என்று சொன்னார் சிவாஜி.
அதைத் தொடர்ந்து தான் மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படமும் மாபெரும் வெற்றி பெற்ற ஜனாதிபதி விருது வாங்கியது. மேற்கண்ட தகவல்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
1954ல் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் வெளியான படம் மலைக்கள்ளன். எம்ஜிஆர், பானுமதி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் அத்தனையும் முத்து முத்தான பாடல்கள். எத்தனை காலம் தான், ஓ அம்மா, பெண்களே, நானே இன்ப ரோஜா, நீலி மகன், உன்னை அழைத்தது, நல்ல சகுணம், நாளை ஆகிய பாடல்கள் உள்ளன. இவற்றில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்தது.
எம்ஜிஆரின் திரையுலக வாழ்வில் மறக்க முடியாத மாபெரும் வெற்றிச்சித்திரம் மலைக்கள்ளன். இந்தப் படத்திற்கு என்று ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உண்டு.