அசர்பைசானுக்கு ஒரு கும்பிடு!.. ஒருவழியா முடிவுக்கு வரும் விடாமுயற்சி!.. நடப்பது இதுதான்!..

by ராம் சுதன் |

லைக்கா தயாரிப்பில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இந்த வரும் துவக்கத்திலேயே அசர்பைசான் நாட்டில் துவங்கியது. பெரும்பாலும் அஜித் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்தான் நடக்கும். துணிவு படத்தின் 90 சதவீத காட்சி அங்குதான் எடுக்கப்பட்டது.

ரசிகர்கள் தொந்தரவு இன்றி படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்பதால் அஜித் எப்போதும் அந்த ஸ்டுடியோவையே விரும்புவார். ஆனால், விடாமுயற்சி படத்தின் கதைப்படி வெளிநாட்டில் எடுக்க வேண்டும் என்பதால் அசர்பைசான் நாட்டை தேந்தெடுத்தனர். ஆனால், அதுவே ஒரு கட்டத்தில் தலைவலியாக மாறிவிட்டது.

மழை, பனி, குளிர் என பல காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டது. அதோடு, அங்கு தினமும் படப்பிடிப்பு நடத்தவே பல லட்சம் செலவு ஆகியது. இதில், திரிஷாவின் கால்ஷீட் கிடைக்கவில்லை எனில் அஜித் உள்ளிட்ட பலரும் அங்கு சும்மாவே தங்கி இருக்க வேண்டும். இப்படி படப்பிடிப்பு நடக்காமலயே பல லட்சம் செலவானது.

ஒருபக்கம், ஒரே நேரத்தில் சில பெரிய படங்களை லைக்கா நிறுவனம் தயாரித்ததால் அந்நிறுவனம் நிதிநெருக்கடியில் சிக்கியது. அதோடு திரிஷா வேறு படங்களுக்கு நடிக்கபோனார். இதனால், பல நாட்கள் படப்பிடிப்பு நடக்கவில்லை. இதனால் கோபப்பட்ட அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தை கமிட் செய்து அதில் நடிக்கப்போனார்.

அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே வெளியான நிலையில் விடாமுயற்சி படத்தின் போஸ்டர் வெளியாகவே இல்லை. இந்நிலையில்தான் சமீபத்தில் ஒரு போஸ்டர் வெளியானது. ஆனால், அஜித் ரசிகர்களுக்கே அந்த போஸ்டர் பிடிக்கவில்லை. ஒருவழியாக சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு மீண்டும் அசர்பைசானில் துவங்கியது. ஆனால், அறுவை சிகிச்சை செய்துகொண்ட மனைவி ஷாலினியை பார்க்க அஜித் சென்னை திரும்பினார். அஜித் அசர்பைசானில் இல்லாததால் திரிஷாவும் சென்னையிலேயே இருக்கிறார்.

வருகிற 8ம் தேதி அஜித் மீண்டும் அசர்பைசான் செல்லவிருக்கிறார். அதன்பின் 20 நாட்கள் அங்கே படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. அது முடிந்தபின் ஒரு சண்டை காட்சி மட்டும் எடுக்க வேண்டி இருக்கிறது. ஆனால், ஆகும் செலவை பார்க்கும்போது ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு எடுக்கலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டனராம். அந்த சண்டைக் காட்சியோடு விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடியவிருக்கிறது. எனவே, திட்டமிட்டபடி வருகிற தீபாவளிக்கு விடாமுயற்சி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story