சஞ்சய் வைத்து விஜயிடம் காரியம் சாதித்த இயக்குனர்... எந்த படத்தில் தெரியுமா?
பிரியமானவளே படத்தில் நடிகர் விஜய் லேடி கெட்டப்பில் முதலில் நடிக்க மறுத்தாராம். அந்த கெட்டப்பில் அவர் நடிக்க இயக்குநர் கே.செல்வபாரதியின் சமயோசிதமான டைமிங்தான் காரணமாம். அப்போது என்ன நடந்தது தெரியுமா?
1984-ம் ஆண்டு வெற்றி படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் விஜய். பின்னாட்களில் தந்தை எஸ்.ஏ.சி இயக்கிய நாளைய தீர்ப்பு மூலம் ஹீரோவாக அறிமுகமாகி கொஞ்சம் கொஞ்சமாக கோலிவுட்டின் உச்ச நடிகர் அந்தஸ்தைப் பிடித்தார். 1992-ல் ஹீரோவாக அறிமுகமானாலும் செந்தூரப்பாண்டி படத்துக்குப் பிறகே அவருக்கு பெரிய பிரேக் கிடைத்தது.
அதுவும் 2000-ம் ஆண்டில் வெளியான குஷி, பிரியமானவளே உள்ளிட்ட படங்கள் அவருக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தன. இதில், பிரியமானவளே படத்தில் கிட்டத்தட்ட நெகடிவ் கேரக்டராக துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார் விஜய். அந்தப் படத்தில்தான் முதல்முறையாக லேடி கெட்டப்பிலும் நடித்திருப்பார்.
இயக்குநர் கே.செல்வபாரதி அந்தப் படத்தை தெலுங்கில் வெளியான பவித்ர பந்தம் கதையைத் தழுவி எடுத்திருப்பார். ஆரம்பத்தில் வேறொரு கதையை முடிவு செய்த அவர், பின்னர்தான் இந்தக் கதையைத் தேர்வு செய்தாராம். ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருந்தபோது, லேடி கெட்டப் பற்றி இயக்குநர் விஜய்யிடம் சொல்ல, 'வேண்டாங்கண்ணா.. ட்ரோல் பண்ணுவாங்க’ என்று சொல்லி ஒப்புக்கொள்ளவே இல்லையாம்.
இதற்கிடையே, மனைவி சங்கீதாவின் பிரசவத்துக்காக லண்டன் சென்றிருக்கிறார் விஜய். குறிப்பிட்ட நாளில் குழந்தை பிறக்காததால், கூடுதலாக இரண்டு நாட்கள் இயக்குநரிடம் அனுமதி கேட்டிருக்கிறார். அப்போதும் குழந்தை பிறக்காததால், இதற்கு மேலும் தாமதிக்க முடியாது என்றெண்ணி ஷூட்டுக்குத் திரும்பியிருக்கிறார். அவர் படக்குழுவோடு இணைந்த சமயத்தில் மகன் ஜேசன் பிறந்த செய்தி விஜய்யை எட்டவே, அந்த மகிழ்ச்சியிலேயே உற்சாகமாக, 'ஜூன் ஜூலை மாதத்தில்...’ பாட்டுக்கு பெப்பியாக டான்ஸ் ஆடிக்கொடுத்தாராம்.
இப்படியாக விஜய் ரொம்பவே உற்சாகமாக இருந்த நேரம் பார்த்து லேடி கெட்டப் குறித்து டைரக்டர் செல்வபாரதி மீண்டும் வலியுறுத்திருக்கிறார். அந்த நேரத்தில் உடனே ஒப்புக்கொண்ட விஜய், லேடி கெட்டப்பிலும் நடித்துக் கொடுத்தாராம்.