
துருவங்கள் பதினாறு படத்தில் அறிமுகமானாலும் இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்கிற திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின் நோட்டா, ஜோம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது நண்பர்களுடன் அவர் கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்ற போது பழைய மகாபலிபுரம் அருகே அவரின் கார் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மீதி விபத்து ஏற்பட்டது. இதில், அவரின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் 2 நண்பர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் விசாரணையில் யாஷிகா ஆனந்தே காரை ஓட்டியது தெரியவந்துள்ளது. காரை மிகவும் வேகமாக அவர் ஓட்டியதால் இந்த விபத்து நடந்துள்ளது எனவும், அவரும், அவரின் 2 ஆண் நண்பர்களூம் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் காயங்களுடன் உயிர் தப்பியதும், அவரின் தோழி பவானி சீட் பெல்ட் அணியாததால் வெளியே தூக்கிவீசப்பட்டு அவர் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, வேகமாக காரை ஒட்டி விபத்து ஏற்படுத்தியதாக யாஷிகா ஆனந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதோடு, அவரின் ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது தோழி பவானி இறந்த விவகாரம் இப்போது வரைக்கும் யாஷிகா ஆனந்திற்கு தெரியாதாம். அதைக் கூறினால் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பாதிக்கும் என்பதால் மருத்துவர்களும், யாஷிகாவின் பெற்றோரும் அதை அவரிடம் கூறவில்லையாம். இந்த தகவல் தெரியாமலேயே யாஷிகா சிகிச்சை பெற்றுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





