கமல் பாணியை பின்தொடரும் யோகி பாபு.... புதிய முயற்சி கை கொடுக்குமா?
தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் பல தடைகளையும், கஷ்டங்களையும் தாண்டி வந்த நடிகர் என்றால் அது காமெடி நடிகர் யோகி பாபு தான். பல நிராகரிப்புகளுக்கு பின்னர் தற்போது நம்பர் ஒன் காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் யோகி பாபு நிச்சயம் இடம் பிடித்துவிடுவார். அந்த அளவிற்கு அவரது மார்க்கெட் உச்சத்தில் உள்ளது.
காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சில காமெடி படங்களில் கதாநாயகனாகவும் யோகிபாபு நடித்துள்ளார். அந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இவரது டைமிங் காமெடிக்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது தமிழ் சினிமாவில் காமெடியன்களுக்கு பஞ்சம் இருப்பதால் ஒன் மேன் ஆர்மியாக யோகி பாபு வலம் வந்து கொண்டிருக்கிறார்.

யோகி பாபு சமீபகாலமாக வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் .அந்த வகையில் தற்போது புதிய படம் ஒன்றில் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை யோகி பாபு இது போன்ற கதாபாத்திரத்தில் நடித்தது இல்லை. தற்போது முதன்முறையாக இந்த கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். எனவே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது
அதாவது முன்னணி இயக்குனர் செல்வராகவனின் உதவியாளரான லதா என்ற பெண் இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் யோகிபாபு படம் முழுவதும் பெண் வேடத்தில் நடிக்க உள்ளாராம். இதுவரை நடிகர் யோகிபாபு எந்த ஒரு படத்திலும் பெண் வேடமிட்டு நடித்ததில்லை. தற்போது முதன்முறையாக இந்த முயற்சியில் இறங்கியுள்ளார். இது எந்த அளவிற்கு கைகொடுக்கும் என தெரியவில்லை.

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் அவ்வை சண்முகி என்ற படத்தில் பெண் வேடமிட்டு நடித்திருப்பார். தற்போது அவருக்கு அடுத்தபடியாக நடிகர் யோகிபாபு இதுபோன்ற கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். யோகி பாபுவின் படங்கள் ஓரளவிற்கு நல்ல பெயரை பெற்று வருவதால், இப்படமும் நிச்சயம் நன்றாக இருக்கும் என்பதே ரசிகர்கள் பலரது கருத்தாக உள்ளது.