கமல் படங்களில் பட்டையைக் கிளப்பிய ஜிப்ரான் ..!
ஜிப்ரான் என்றால் அது கமல் படங்களில் நிறைய இசை அமைத்தவர். கமலின் புதிய படங்களில் பெரும்பாலும் இவர் தான் இசை அமைத்தார். விஸ்வரூபம் 2, தூங்காவனம் உள்பட 6 படங்களில் கமலுடன் பணியாற்றியுள்ளார். இவரது இசையில் இளைஞர்களைக் கவரும் விதத்தில் ஒருவித ஈர்ப்பு இருக்கும்.
பாடலாசிரியர், இசையமைப்பாளர் என இரு பணிகளை திறம்பட செய்பவர். இவரைப் பற்றிய சில குறிப்புகள்...உங்கள் பார்வைக்கு..!
ஜிப்ரான் 12.08.1980ல் கோவையில் பிறந்தார். 10ம் வகுப்பு படிக்கும்போது அவரது தந்தையின் தொழில் முடங்கியது. இதனால் சென்னைக்கு குடியேறினார்.
தனது 8வது வயதில் யன்னி என்ற இசைக்கலைஞரின் பியானோ வாசிப்பைக் கேட்டார். அதைக் கேட்க கேட்க ஜிப்ரானுக்கு அதில் நாட்டம் அதிகரித்தது. இசைப்பள்ளியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட ஒரு சில தடங்கல்களால் அவரால் வகுப்பிற்கு ஒழுங்காகச் செல்ல முடியவில்லை. அப்போது பால் அகஸ்த்தின் என்பவரிடம் கீ போர்டு வாசிக்கக் கற்றுக்கொண்டார். இசைப்பள்ளியை முடித்து 2 ஆண்டுகள் ஆன நிலையில், அவர் இசைக்கூடத்தை நிறுவினார். 6 ஆண்டுகாலத்தில் 800க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு இசை அமைத்தார்.
தொடர்ந்து மேற்படிப்புக்காக சிங்கப்பூர் சென்றார். அங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். தொடர்ந்து பகுதி நேர வேலையாக அங்கேயே சில இசைக்கூடங்களில் பின்னணி இசை அமைத்தார். போதிய வருமானம் கிடைக்கவில்லை. அதனால் நாடு திரும்பினார். நீண்ட இடைவெளி காரணமாக அவரது விளம்பரத் தொழிலும் பாதித்தது. 2011ல் தான் முதல் பட வாய்ப்பு தமிழில் அவருக்கு கிடைத்தது. அந்த படம் வாகை சூட வா. இதற்காக அவருக்கு விஜய் விருது கிடைத்தது.
தொடர்ந்து வத்திக்குச்சி, குட்டிப்புலி, நையாண்டி போன்ற படங்களுக்கு இசை அமைத்தார்.
கமல்ஹாசனின் உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம், விஸ்வரூபம் 2, கடாரம் கொண்டான் என தொடர்ந்து அவரது படங்களில் இசை அமைத்தார். ரன் ராஜா ரன், சீகட்டி ராஜ்யம், பாபு பங்காரம், ஹைபர், உங்காரலா ராம்பாபு ஆகிய தெலுங்கு படங்களிலும் இசை அமைத்தார். இவற்றில் ஹைபர் படத்தில் பாடல்களுக்கு மட்டும் இசை அமைத்தார்.
அதே கண்கள், மகளிர் மட்டும் (2017), அறம், தீரன் அதிகாரம் ஒன்று, மாயவன், சென்னை 2 சிங்கப்பூர், ராட்சசன் ஆகிய படங்களிலும் இசை அமைத்தார். அதிரன் என்ற மலையாளப் படத்துக்கு இசை அமைத்தார். அவரது படங்களில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்...
வாகை சூட வா
தனது முதல் படமான வாகை சூட வா படத்திற்காக இவருக்கு 4 விருதுகள் கிடைத்தன. இந்த வாகை உண்மையிலேயே ஜிப்ரானுக்குத் தான் என்றால் அது மிகையில்லை. விஜய் விருது, ஆனந்த விகடன் விருது, மிர்ச்சி திரை இசை விருதுகள், பிக் பண்பலை மெல்லிசை விருதுகள் என விருதுகளை வாரிக் குவித்த படம் இது. இந்தப் படத்தில் விமல், இனியா உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் செங்கச் சூளக்காரா, சரசர சாரக் காத்து, தஞ்சாவூர் மாடத்தி, போறானே, போறானே, தைல, தைல, ஆனா ஆவன்னா, ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.
தூங்காவனம்
2015ல் வெளியான இப்படத்தில் கமல், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்தனர். ராஜேஷ் எம். செல்வா இயக்கினார். கமலின் சொந்தப்படமான இது தெலுங்கிலும் ரீமேக் ஆனது. இப்படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் உண்டு. நீயே உனக்கு ராஜா என்ற இந்தப் பாடல் வைரமுத்து எழுத, கமல்ஹாசன் பாடினார்.
விஸ்வரூபம் 2
2013ல் வெளியான விஸ்வரூபம் படத்திற்குப் பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். வெளியானதோ 2018ல தான்;. கமல், சந்திரஹாசன் தயாரிக்க, கமலே இயக்கிய படம். ஜிப்ரானின் இசையில் தியேட்டரே அதிர்ந்தது. கமமலுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா உள்பட பலர் நடித்தனர். ஞாபகம் வருகிறதா, நானாகிய நதி மூலமே, சாதி மதம் உள்பட 4 பாடல்களைக் கொண்டது.
கடாரம் கொண்டான்
விக்ரமை வைத்து கமல் சொந்தப்படம் தயாரித்தார். அது 2019ல் வெளியான கடாரம் கொண்டான். இப்படத்தை தூங்காவனம் இயக்குனர் ராஜேஷ் தான் இயக்கினார். விக்ரமின் நடிப்பு மற்றும் தோற்றம் பலரின் பாராட்டைப் பெற்றது. இந்த படத்தில் கமல் மகள் அக்ஷரா ஹாசன் நடித்துள்ளார். கடாரம் கொண்டான், தாரமே தாரமே, தீ சுடர் குனியுமா ஆகிய பாடல்கள் உள்ளன.
ஜிப்ரானுக்கு நம்ம டீம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.