×

செங்கமலம் சிரிக்குது....சங்கமத்தை நினைக்குது...தாவணிக்கனவுகளை சுமந்த பாக்யராஜ் 

 
sen

தாவணிக் கனவுகள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் பாக்கியராஜ், சிவாஜிகணேசன், ராதிகா, ராதா, ஊர்வசி, இளவரசி, உமா பரணி, பாரதிராஜா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

அது ஒரு வித்தியாசமான கோணம்...பார்வையாளர்களை பரவசப்படுத்தும் அளவில் பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட சிற்பம் போல் நம் இயக்குனர் கே.பாக்யராஜ் அவரது படங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்திருப்பார். முக்கியமாக தாய்க்குலங்கள் பெரிதும் வரவேற்கும் படம் யாரென்றால் அது எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக கே.பாக்யராஜ் படங்கள் தான். 

ஒரு படத்திற்கு கதை முக்கியமா? அல்லது திரைக்கதை முக்கியமா? என்று பார்த்தால் திரைக்கதை தான் நம்பர் 1 இடத்தைப் பிடிக்கிறது. சாதாரண கதை கூட சூப்பரான திரைக்கதையால் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் நல்ல கதை கூட சப்பையான திரைக்கதையால் மொக்கை படமாகி உள்ளன. அந்த வகையில் நம் இயக்குனர் கே.பாக்யராஜின் படங்களுக்கு பிளஸ் பாயிண்டே திரைக்கதை தான். அது நம்மை அவருடனேயே பயணிக்க வைத்து விடும். அதாவது தியேட்டரில்; நாம் அமர்ந்த இருக்கையை விட்டு எழ விடாது. அந்த அளவுக்கு இறுக்கமாக பற்றிக்கொள்ளும். இவர் படங்களில் ஏகப்பட்டவை நல்ல அம்சமான படங்கள் தான். அவற்றில் தாவணிக்கனவுகளைப் பார்க்கலாம். 

படத்தின் பெயரைக் கேட்டால் ஏதோ ஒரு கிளுகிளுப்பான கதையாக இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். அதுதான் உங்களை திரையரங்கிற்கு முதலில் இழுத்து வந்துள்ளது. 2வது பாக்யராஜ். இவரது படங்களை நம்பிச் செல்லலாம். காமெடி கலந்த யதார்த்தமான ஆழமான கதையோட்டம் இவரது படத்தின் உயிர்நாதமாக விளங்கும். அப்படிப்பட்ட படங்கள் ஏராளமாக வந்துள்ளன. என்றாலும் தாவணிக்கனவுகள் அப்போதைய இளசுகள் கொண்டாடிய படம். 

சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த பட்டதாரி வாலிபனுக்கு 5 தங்கைகள். படித்த படிப்புக்கு வேலையில்லை, குடும்ப சுமை, தங்கைகளின் திருமணம் போன்ற பிரச்சனைகளிலிருந்து எப்படி மீண்டு வருகிறான் இந்த படத்தின் நாயகன் என்பதே கதை. இது ஒரு சாதாரண கதை தான். ஆனால் இதை தன் திரைக்கதை யுக்தியால் காட்சிப்படுத்திய விதம், செம....ரொம்ப எளிமையாக, அதிக செலவில்லாமல் படம் எடுத்து, அதுவும் அன்றாடம் நம் வீட்டிலே நடக்கும் சில சம்பவங்களை ஞாபகப்படுத்துகிறார்.

சுப்ரமணியாக பாக்யராஜ். ஆரம்ப காட்சிகளிலிருந்தே படத்தை தன்னுடைய அப்பாவியான நடிப்பால் கொண்டு செல்கிறார். அதுவும் குடித்துவிட்டு தன் வீட்டிற்கு வந்து இவர் பண்ணும் அலப்பறை அருமை. தங்கைகளின் வாழ்க்கைக்காக கலங்கும் அண்ணனான இவரின் நடிப்பு இவருக்கு கனகச்சிதமாகப் பொருந்துகிறது. அதே சமயம் சென்னைக்கு வந்து கடத்தல், ரஜினி போல் சினிமாவில் நடிப்பது, லாட்டரி டிக்கெட் என்று லிஸ்ட் போட்டு முயற்சி செய்து கையை சுட்டுக்கொள்வது செம காமெடி.

இந்த படத்திற்கு இன்னொரு பெரிய பலம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன். மிலிட்டரியாக படத்தின் கதாநாயகன் கே.பாக்யராஜுக்கு உறுதுணையாக இருந்து அவரது குடும்பத்திற்க்காகவே உயிரை விடும் ஒரு உருக்கமான கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் சிவாஜி. அவரது மிலிட்டரிக்கே உரித்தான கம்பீர தோற்றம், கொடியேற்றி சல்யூட் அடிப்பது என அசத்தியிருப்பார். அவரது முகபாவனைகளில் நெற்றி, புருவம், கண், இமை, கன்னம், காது, வாய் என ஒவ்வொன்றும் தனித்தனியாக நடித்து அசத்தும்.  கதாநாயகியாக ராதிகா. பார்த்திபன், பாக்யராஜின் கடைசி தங்கையாக வரும் இன்றைய டிவி நடிகை பிரியதர்ஷினி, குறிப்பாக பாரதிராஜா மற்றும் அவரின் குழுவினர் அனைவரும் படத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.

படத்தில் நடிகர் பாக்யராஜை கதாநாயகனாக நடிக்க வைத்து இயக்குனராகவே நடித்திருப்பார் பாரதிராஜா. மனிதர் இயக்குனராகவே வாழ்ந்து விட்டார். அவரிடம் சினிமா வாய்;ப்பு பெறுவதற்காக ஏன் சார் இந்த சீன்ல இப்படி நடிச்சிருக்கலாமே என ஆதங்கத்துடன் பாக்யராஜ் பேசுவதும்...அதை இயக்குனர் பாரதிராஜா ஆர்வத்துடன் கேட்பதும், உடனே படத்தில் அவரை நடிக்க வைப்பதும் ரசிக்கத்தக்கவை. 

இந்த படத்தில் இசைஞானியின் இசைமழையில் 'ஒரு நாயகன் உதயமாகிறான்' பாடல் இன்றும் கேட்கத்தூண்டும். அதேபோல் செங்கமலம் சிரிக்குது பாடல் உங்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு செல்லும். குருவி கரம்பை சண்முகம் எழுதிய இப்பாடiலை எஸ்பிபியுடன் ஜானகி லயித்து பாடியிருப்பார். பாடலை ஒருமுறை கேட்டுப்பாருங்கள். நீங்கள் வேறு லோகத்திற்குச் செல்லலாம். அப்படி ஒரு தேனான பாடல் இது.

'நீங்களா எடுத்தா திருட்டு நானா கொடுத்தா திருப்தி', 'நான் கல்யாணத்துக்கு நாள் குறிச்சிட்டு வந்திருக்கேன், அந்த தேதியில வளைகாப்பு நடத்தலாம்னு சொல்லுறியே?' போன்ற வசனங்கள் எனக்குத் தெரிந்து பாக்யராஜால் மட்டுமே எழுதமுடியும். இவர் ஒரு சிறந்த வசனகர்த்தா என்பதற்கு இது வெறும் சாம்பிள் தான். எந்த ஒரு இடத்திலும் சிறு தொய்வு கூட இல்லாமல் படத்தை அருமையாக வடிவமைத்திருக்கிறார் கே.பாக்கியராஜ். படத்தை தயாரித்தது பாக்யராஜின் 'பிரவீனா பிலிம்ஸ் லிமிடெட்'. இந்த படம் 1984, செப்டம்பர் 14 அன்று வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. 

From around the web

Trending Videos

Tamilnadu News