×

16 மொழிகள் 45 ஆயிரம் பாடல்கள்
3 தலைமுறைகளைக் கண்ட அதிசய பாடகர் 

 
spb1234

'மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ...எண்ணம் கன்னிப் பாவையின்றி  ஏழு ஸ்வரம்தான் பாடுமோ..."என்று மூச்சுவிடாத பாடலைப் பாடி, நம்மை இன்னிசை மழையில் மூழ்காத குறையாக முக்கியெடுத்து திணறடித்துக் கொண்டு இன்று வரை இருப்பவர் எஸ்.பி.பி. இங்கு நீங்கள் நன்றாக கவனித்தால் ஒரு உண்மை புலப்படும். மழையில் நனையத்தானே முடியும் எப்படி மூழ்குவது என்றால், இன்னிசை மழை இது. சாதாரண மழை அல்ல. அதுபோல இன்று வரை இருப்பவர் என்று ஒரு வரியில் சொல்லியதற்கு என்ன அர்;த்தம் என்றால் இது புதுப்புது அர்த்தங்கள் அல்ல. அவர்தம் கானக்குரல் நம் செவியைக் குளிரச் செய்து கொண்டிருக்கிறது என்றே அர்த்தம். 

கேளடீ கண்மணி பாடகன் சங்கதி....நீ இதைக் கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி...என்று நம்மை இசைவிருந்துக்கு அழைத்து போகும் பாதை தூரமே...என்று நிம்மதியுடன் விடைபெற்று விட்டார் அந்த கானதேவன். இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அவரது நீங்காத நினைவலைகளில் சிற்சில....

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்பதே எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இயற்பெயர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கொணடம்மாபேட்டை கிராமத்தில் 4 ஜூன் 1946 அன்று அன்று எஸ்.பி. சாம்பமூர்த்தி - சகுந்தலம்மா தம்பதியினருக்கு பிறந்தார். தந்தை ஒரு இசைக் கலைஞர் என்பதால் எஸ்பிபிக்கு இளம் வயதில் இருந்தே இசை ஆர்வம் தொற்றிக்கொண்டது. தந்தையின் இசையமைப்பை கவனித்து இசைக் கருவிகளை வாசிக்க ஆரம்பித்தார். இசை ஆர்வம் ஒருபுறம் இருக்க, பொறியாளராக வேண்டும் என்பதே அவரது ஆசை.

பியுசி தேர்வு எழுதிவிட்டு நெல்லூரில் நண்பர்களுடன் இணைந்து இசைக்குழு ஒன்றைத் தொடங்கினார.; எஸ்பிபி. பின்னர், சென்னையில் ஏஎம்ஐஇ படித்தார். படித்துக்கொண்டே சினிமாவில் பாட வாய்ப்பு தேடி வந்தார். பொறியியல் இரண்டாமாண்டு படிக்கும்போதே பாட வாய்ப்பு கிடைத்தது. முகமது பின் துக்ளக் படத்தில் நடிகை ரமாபிரபாவின் பிறந்தநாளுக்கு 'ஹேப்பி பர்த்டே டு யூ" என்று பாடிக்கொண்டே அந்த காட்சியில் தோன்றுவார் எஸ்பிபி. இதுதான் அவரது முதல் அரங்கேற்றம்.

பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, துளு என பல்வேறு மொழிகளில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாடி ரசிகர்களை தன் காந்தக்குரலால் சுண்டியிழுத்தார்;. ஏராளமான மாநில அரசு விருதுகள், விருதுகள் கலை அமைப்புகளின் விருதுகள் இவற்றோடு, இந்திய அரசின் மிக உயர்வான விருதான 2010 ஆம் ஆண்டுக்கான பத்மபூஷண் விருதும் இவரை வந்து சேர்ந்தது. இதுவரை தேசிய விருதினை தென்னிந்தியாவின் நான்கு மொழிகளிலும் பெற்ற ஒரே பின்னணிப் பாடகர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. பாடகர் என்பதைத் தவிர நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட் என்ற பன்முகம் கொண்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

'மன்மத லீலை' என்ற தமிழ் திரைப்படத்தின் தெலுங்கு படமான 'மன்மதா லீலா' படத்தில் எஸ்பிபி டப்பிங் கலைஞர் ஆனார். இந்த படத்தில் கமல்ஹாசனுக்காக குரல் கொடுத்தார் அவர். கமல்ஹாசன், ரஜினிகாந்த், சல்மான் கான், பாக்யராஜ், மோகன், அனில்கபூர், கிரீஷ் கர்னாட், ஜெமினி கணேசன், அர்ஜூன் சர்சா, நாகேஷ், கார்த்திக் மற்றும் ரகுவரன் ஆகியோருக்கு பல்வேறு மொழிப்படங்களில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.

மன்றம் வந்த தென்றலுக்கு, சங்கீத மேகம், காதல் ரோஜாவே, சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் என்ற இந்தக் காந்த குரல்தான், காதல், சோகம், குதூகலம், கற்பனை, மோகம் என எல்லா உணர்வுகளையும் நமக்கு தேவையான தருணங்களில் மருந்தாக தந்தது.

'போகும் பாதை தூரமே.... வாழும் காலம் கொஞ்சமே..!" எனும் வரிகளில் தான் எத்தனை இனிமை..! இதுபோன்ற அவரது பல பாடல்கள் நம்மை அறியாமல் முணுமுணுக்க வைத்து விடும் என்பது திண்ணம். 

ரஜினி, கமல் இவர்களின் அறிமுகப்பாடல்களை பெரும்பாலும் இவர்தான் பாடியிருப்பார். அதேபோல் எம்ஜிஆருக்கும் அவரைப்போல பாடியிருப்பார். ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக், சத்தியராஜ்,பாக்கியராஜ் என அனைவருக்கும் குரல் பொருந்துமாறு பாடியிருப்பார் எஸ்.பி.பி. அடிமைப்பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா பாடலை எம்ஜிஆருக்காக பாடியிருப்பார். 1969ல் வெளியான சாந்தி நிலையம் படத்தில் இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள்...துணையை எண்ணி பாடல் தான் எஸ்.பி.பி.க்கு தமிழ்சினிமாவில் முதல் பாடல். கடைசியாக 2020ல் ரஜினியின் அண்ணாத்த படத்துக்காக அறிமுகப்பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

தலைமுறை இடைவெளி காணாத ஒரேயொரு பாடகர் யாரென்றால் அது தமிழ் திரையுலக வரலாற்றில் எஸ்.பி.பி. தான். 1966 ஆம் ஆண்டு தொடங்கி கலைத்துறையில் மூன்று தலைமுறைகளை கண்டவர், 16 மொழிகளுக்கு மேல் பாடியவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னிலை பாடகராகத் தொடர்ந்து தன் இருப்பைத் தக்க வைத்த ஒரு ஆளுமை. எல்லா மாற்றங்களிலும் எஸ்பிபி தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார்.

'எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே..." என்ற வரிகள் உண்மைதான். இன்று வரை அவரது கானக்குரல் இசை எனும் காற்றில் கலந்திருக்கிறது. இசை இருக்கும் வரை அவரது புகழ் இருக்கும்.

From around the web

Trending Videos

Tamilnadu News