2024ல் தமிழ் சினிமாவிற்கு சாபக்கேடாக அமைந்த படங்கள்.. கதறவிட்ட கங்குவா
ஒவ்வொரு வருடத்தின் முடிவில் இந்த வருடம் எப்படி போனது என்று கேட்பது வழக்கம். அதை போல் சினிமாவிலும் அந்த வருடத்தில் வெளியான படங்களில் எத்தனை படங்கள் ஹிட்? எத்தனை படங்கள் ஃபிளாப் என புள்ளி விவரம் சேகரிப்பதும் வழக்கம். ஆனால் இந்த வருடத்தில் டாப் ஹீரோக்களின் படங்களே பெரும்பாலும் பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கின்றன. அதுவும் ஓவர் ஹைப் ஏத்தி ரசிகர்களை சோதித்ததுதான் மிச்சம்.
ரத்னம்: விஷால் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம்தான் ரத்னம். விஷால் ஹீரோ என்பதால் இல்லை.ஹரியின் இயக்கத்தில் எனும் போது அவர் கண்டிப்பாக ஏமாற்றமாட்டார் என்ற நம்பிக்கைதான். படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகிபாபு போன்ற பல பேர் நடித்திருந்தனர். படமுழுக்க ரத்தம், வன்முறை என முதலில் படத்தை விற்கவே ஹரியும் விஷாலும் படாத பாடுபட்டனர்.
லால்சலாம்: இது முதலில் கிரிக்கெட் படமா அல்லது தேர்த்தெருவிழா படமா என்பதிலேயே ஒரு குழப்பம். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் கூட்டணியில் உருவான இந்தப் படத்தை எப்படியாவது ஓடவைக்கவேண்டும் என படத்தின் இயக்குனரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன் அப்பாவின் உதவியை நாடினார். மகளுக்காக ரஜினியும் படத்திற்குள் வர இதுக்கு ரஜினி சும்மாவே இருந்திருக்கலாம் என்பது போல் மாறியது. அதுவும் கேமியோ என்ற பெயரில் வரவழைக்கப்பட்டு ரஜினி படமாகவே பார்க்கப்பட்டது.
இந்தியன் 2: வர்ம கலையை எதுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்கு அர்த்தமே இல்லை என்று சொல்லவைத்த படமாக மாறியது இந்தியன் 2. இந்தப் படம் வந்தது ஒருவகையில் நல்லதுதான் என்றும் சொல்லலாம். பசியோடு இருந்த யானைக்கு கரும்புதோட்டமே கிடைத்தாற் போல மீம்ஸ்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்தியன் 2 படம் பெரிய விருந்தாக மாறியது. வச்சு செய்தனர் மீம்ஸ் கிரியேட்டர்கள்.
ரோமியோ: இந்திப் படத்தின் கருவை நம் தமிழ் சினிமாவிற்கு ஏற்றபடி அமைத்து வெளியான படம்தான் ரோமியோ. இதில் ஹீரோயின் கதாபாத்திரத்தை இன்னும் மெருகேற்றியிருக்கலாம். சில காட்சிகள் தேவையற்ற காட்சிகளாகவே படத்தில் அமைந்தது. ஆனால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரிய வரவேற்பை பெற்றாலும் படம் கொஞ்ச நாளிலேயே காணாமல் போனது.
பிளடி பெக்கர்: தயவு செய்து டிரெய்லர் பாத்து ஏமாந்துராதீங்கப்பா என்பதற்கு ஒரு உதாரணம் தான் இந்த பிளடி பெக்கர் திரைப்படம். டிரெய்லரில் படத்தின் நல்ல காட்சிகளே இதுதான் என இருக்கும் காட்சிகளை காட்டி விட்டு மக்களை ஏமாற்றியது பிளடி பெக்கர் படக்குழு. கவினின் வித்தியாசமான நடிப்பு இந்தப் படத்திற்கு பெரிதும் உதவும் என நினைத்தால் கடைசியில் கவினை மாதிரியே படம் பார்க்க வந்த அனைவரையும் மாற்றியதுதான் மிச்சம்.
பிரதர்: ஜெயம் ரவியின் நடிப்பில் அமரன் திரைப்படத்தோடு மோதிய திரைப்படம்தான் பிரதர். இந்தப் படத்திற்காக எந்தவித பில்டப் மற்றும் புரோமோஷன் அதிகளவு இல்லாததால் படத்தின் தோல்வி பற்றி யாரும் பெரிதாக பேசவில்லை. எப்பவோ வரவேண்டிய திரைப்படத்தை இப்போதைய காலகட்டத்தில் கொடுத்து இயக்குனர் போரடிக்க வைத்துவிட்டனர்.
கங்குவா: கடைசியாக வந்தாலும் வந்தது பெரிய அணுகுண்டா. எப்பா என்னப்பா பண்ணி வச்சிருக்கே என சிறுத்தை சிவாவை கேட்காத ஆளே இல்லை. படமாடா எடுத்து வச்சிருக்க? என்று நொந்து கொள்ளும் அளவுக்கு கங்குவா படம் ரசிகர்களை வருட இறுதியில் அதிகமாகவே சோதித்தது என்று சொல்லலாம். வழக்கம் போல் சூர்யாவின் நடிப்பு ஓகே. ஆனால் கதையில்தான் கொஞ்சம் இல்லை. அதிகமாவே சொதப்பி விட்டனர்.