2026ல் இதுவரை வெளியாகி அதிக வசூலை பெற்ற படங்கள்!. முதலிடத்தில் கருப்பு!...
ஒவ்வொரு வருடம் கோலிவுட்டில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் புதிய படங்கள் தியேட்டர்களில் வெளியாகி வருகிறது. அப்படி வெளியாகும் எல்லா திரைப்படங்களும் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடிப்பதில்லை.
சில படங்கள் மட்டுமே ரசிகர்களை கவர்ந்து தியேட்டரில் வரவேற்பை பெற்று எல்லோருக்கும் லாபத்தை கொடுக்கின்றன. சமீப காலமாகவே சின்ன பட்ஜெட்டில் வெளியாகும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் கூட நல்ல வசூலை பெற்று வருகின்றன. தாய் கிழவி, யூத், பிளாஸ்ட் ஆகிய 3 படங்களும் குறைவான செலவில் எடுக்கப்பட்டு அதிக வசூலை பெற்ற படங்களாக இருக்கிறது.
இந்நிலையில், 2026ம் வருடத்தை பொறுத்தவரை இதுவரை வெளியான படங்களில் அதிக வசூலை பெற்ற 5 திரைப்படங்கள் பற்றி பார்ப்போம்:
இதில், 5வது இடத்தில் அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து அறிமுக இயக்குனர் சுபாஷ் கே.ராஜ் இயக்கி வெளியான பிளாஸ்ட் திரைப்படம் இருக்கிறது. குறைவான பட்ஜெட்டில் வெளியாகி 68 கோடி வரை இப்படம் வசூல் செய்திருக்கிறது.

அடுத்து, 4து இடத்தில் கருணாஸின் மகன் கென் கருணாஸ் இயக்கி நடித்து வெளியான யூத் திரைப்படம் இருக்கிறது. இந்த திரைப்படம் 70 முதல் 82 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.
அடுத்து, சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா, சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான தாய்க்கிழவி திரைப்படம் 72 கோடி முதல் 82 கோடி வரை வசூல் செய்து 3வது இடத்தில் இருக்கிறது.
அடுத்து, சுதாகொங்கரா இயக்கத்தில் ஹிந்தி திணிப்பை கருவாக கொண்டு உருவான பராசக்தி திரைப்படம் 85 முதல் 100 கோடி வரை வசூல் செய்து 2வது இடத்தில் இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
முதலிடத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா ஆகியோர் நடித்து வெளியான கருப்பு திரைப்படம் இருக்கிறது. இந்த திரைப்படம் 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது. அடுத்த 6 மாதங்களில் விஜயின் ஜனநாயகன், சிம்புவின் அரசன், ரஜினியின் ஜெயிலர் 2 உள்ளிட்ட பல பெரிய படங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
