×

தனித்தீவில் 7 நாள்... 60 படங்கள் - தில் இருக்கா உங்களுக்கு?

ஸ்வீடன் படவிழாக் குழு ஒன்று அந்நாட்டின் தனிமையான தீவில் 7 நாள்கள் படம் பார்க்கும் வாய்ப்பை ரசிகர் ஒருவருக்கு வழங்க இருக்கிறது. 
 

கொரோனா காலத்தில் தனிமைப்படுத்தல், குவாரண்டீன், சமூக இடைவெளி போன்றவை அன்றாட நடைமுறைகளாகிவிட்டன. பொது இடங்களில் சமூக இடைவெளி பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஸ்வீடன் படவிழாவை நடத்தும் குழுவினர் சமூக இடைவெளி கான்செப்டை வித்தியாசமாகக் கடைபிடிக்க இருக்கிறார்கள். 

ஸ்வீடனின் பாரம்பரிய படவிழாவான கோட்பெர்க் திரைப்பட விழாவை நடத்தும் குழுவினரின் முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. அப்படி என்ன முயற்சி என்கிறீற்களா... அவர்களின் இணையதளத்தில் போட்டி ஒன்றை நடத்தி வெற்றியாளராக ரசிகர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். வெற்றிபெற்ற அந்த ரசிகர், ஸ்வீடனின் வடக்குக் கடற்கரையில் இருக்கும் பேட்டர் நாஸ்டர் என்ற பாறைகள் நிறைந்த தீவுக்கு 7 நாள் தங்க அனுப்பி வைக்கப்படுவார். 

அந்தத் தீவில் இருக்கும் கைவிடப்பட்ட கலங்கரை விளக்கம் தற்போது நட்சத்திர ஹோட்டலாக மாற்றப்பட்டிருக்கிறது. அந்த ஹோட்டலில் தனிமையில் ஒரு வாரத்தைக் கழிக்க இருக்கும் வெற்றியாளருக்கு படங்கள் மட்டுமே ஒரே கம்பெனி. திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியிருக்கும் 60 படங்களை அவர் தனிமையில் ஒருவார காலத்துக்குப் பார்த்து ரசிக்கலாம். இதற்கு இன்னொரு கண்டிஷனையும் திரைப்பட விழாக் குழுவினர் வைத்திருக்கிறார்கள். அது என்னவென்று கேட்கிறீர்களா... போட்டியில் வெற்றிபெற்று தனித்தீவுக்குச் செல்லும் ரசிகர், தன்னுடன் செல்போன் உள்பட எந்தவொரு பொருளையும் எடுத்துச் செல்லக் கூடாது. ஏன் ஒரு புத்தகத்தைக் கூட எடுத்து வரக் கூடாது என ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் போடுகிறார்கள். உணவு, தங்குவதற்கு இடம், போதுமான அளவு மதுபானம் என எல்லாச் செலவுகளையும் நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் Goteborg Film Festival-ன் இணையதளத்தில் சென்று ஒரு அப்ளிகேஷனைத் தட்டிவிடுங்கள்...

From around the web

Trending Videos

Tamilnadu News