'96' ஜோடி மீண்டும் இணையும் 'லவ் அண்ட் வார்'... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
நடிகர் ஆதித்யா பாஸ்கர் மற்றும் நடிகை கௌரி கிஷன் மீண்டும் ஜோடியாக நடித்துள்ள 'லவ் அண்ட் வார்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. '96' திரைப்படத்தில் இளம் வயது விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவாக நடித்த இவர்களின் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷன் நடித்துள்ள நிலையில், அவர்களுடன் மூத்த நடிகர் கே. பாக்கியராஜ், ரெடின் கிங்ஸ்லி, சரஸ் மேனன், நந்திதா ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை கடந்த ஜூன் 26-ஆம் தேதி நடிகர்கள் ஜீவா மற்றும் ஆர்யா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் போஸ்டர் வைரலாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இப்படத்திற்கு எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ள நிலையில், ஆரிஜின் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கண்ணா பாஸ்கர் தயாரித்துள்ள இப்படம், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்வுபூர்வமாகவும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக உருவாகியுள்ளது.
'96' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன் ஜோடி மீண்டும் திரையில் இணைந்திருப்பதால், 'லவ் அண்ட் வார்' திரைப்படம் ரசிகர்களிடையே தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
