அஜித் ஆபிஸ்ல வேலை செஞ்சிட்டு அவருக்கே வில்லன்!.. அர்ஜூன் தாஸ் ஸ்டோரி தெரியுமா?!..
Arjun Das: லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். இவருக்கு பெரிய பலமே அவரின் கட்டையான குரல்தான். அதுவே அவரை மற்ற நடிகர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. சென்னையை சேர்ந்த இவர் துபாயில் சில வருடங்கள் வேலை செய்தார். அதன்பின் சினிமாவில் நடிக்கும் ஆசைப்பட்டு சென்னை வர முடிவு செய்தார்.
அதற்காக தனது உடலில் பல கிலோ எடைகளை குறைத்தார். அதன் பின்னரே சென்னை வந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடியிருக்கிறார். இவர் முதல் முதலில் நடித்த திரைப்படம் பெருமான். இந்த படம் 2012 ஆம் வருடம் வெளியானது. அதன்பின் சில படங்களில் நடித்தாலும் கைதி படத்தில் இவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் அந்தகாரம், மாஸ்டர், விக்ரம், அநீதி, ரசவாதி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்
ஆனால், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தில் இவருக்கு மெயின் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை அவருக்கு கொடுத்ததே அஜித்தான். என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு வாழ்க்கை கொடுத்தது போல குட் பேட் அக்லி மூலம் அர்ஜுன் தாஸின் வாழ்க்கையை மாற்றி இருக்கிறார் அஜித். ஏனெனில் இந்த படத்திற்கு பின் அவருக்கு பல படங்களிலும் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.
இன்று கூட அவரின் நடிப்பில் பாம் என்கிற திரைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் சில படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய அர்ஜுன் தாஸ் ‘ஒரு காலத்தில் சுரேஷ் சந்திரா ஆபீஸில் அஜித் சார் படங்களுக்கு மார்க்கெட்டிங் வேலை செய்து வந்தேன். ஆனால் இப்ப அவருக்கே வில்லனா நடிச்சிட்டேன்’ என சந்தோஷமாக பேசியிருக்கிறார்.
