அர்ஜுன் மகள் குறித்து அவதூறு!.. போலீஸ் விசாரணையில் பயில்வான் ரங்கநாதன்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சமீபத்தில் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவின் திருமணம் இத்தாலியில் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் ஐஸ்வர்யா கலந்துகொண்ட நிலையில், அவரது கணவர் உமாபதி பங்கேற்கவில்லை எனக் கூறப்பட்டது. இதையடுத்து இருவரது திருமண வாழ்க்கை குறித்தும் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவின.
இதற்கிடையில், நடிகரும் யூடியூபருமான பயில்வான் ரங்கநாதன், ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவரது மது அருந்தும் பழக்கம் குறித்தும் வீடியோ ஒன்றில் பேசியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் வெளியிடப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த நடிகர் அர்ஜுன், தனது மகளை மது பழக்கத்திற்கு அடிமையானவர் என ஆதாரமின்றி சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது என அறிக்கை வெளியிட்டார். மேலும், தனது மகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நவம்பர் 19ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த விவகாரத்தில் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட வீடியோவும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அர்ஜுன் அளித்த புகாரின் அடிப்படையில் பயில்வான் ரங்கநாதனிடம் போலீசார் விசாரணை நடத்துவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
