10 கோடி குடுங்க!.. அதிகமான கூட்டத்தை சேர்த்து காட்டுறேன்!.. விஜய் மாநாட்டை கலாய்த்த கருணாஸ்
TVK Maanadu: நடிகர் விஜய் துவங்கியுள்ள அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு சமீபத்தில் மதுரையில் நடந்தது. இந்த மாநாட்டில் விஜய் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 10 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
இந்த மேடையில் விஜய் ஆளுங்கட்சியான திமுகவுக்கு எதிராக மிகவும் ஆவேசமாக பேசினார். முதல்வரை ஸ்டாலின் ‘அங்கிள்’ என குறிப்பிட்டு பேசியது திமுகவினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே அவர்கள் எதிர்வினை ஆற்றி வருகிறார்கள். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு தக்க பதிலடி கொடுப்போம் எனவும் அவர்கள் சொல்லி வருகிறார்கள்.
ஒருபக்கம் பாஜகவையும் சீண்டிய விஜய் அந்த கட்சி தங்களின் கொள்கை எதிரி என தெளிவாக குறிப்பிட்டார். மேலும் பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி என ஆவேசமாகவும் பேசினார். இதற்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார்கள். ‘2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் நானே நிற்பது போல் நினைத்து ஓட்டு போடுங்கள். இந்த கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என பேசுகிறார்கள்.. இந்த கூட்டம் எல்லாம் ஓட்டாகவும் மாறும்.. ஆளும் கட்சிக்கு வேட்டாகவும் மாறும்’ என பேசினார் விஜய்.
ஒரு நடிகர் கூட்டம் நடத்தினால் அவரைப் பார்க்க பலரும் வருவார்கள். ஆனால் அது ஓட்டாக மாறாது என்பது பலரின் விமர்சனங்களாக இருக்கிறது ஆனால் விஜயோ 2026-ல் ஆட்சியை பிடிக்கலாம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார். இந்நிலையில் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசிய போது ‘10 கோடி எனக்கு கொடுத்தால் விஜய் மாநாட்டுக்கு போனவர்களை விட அதிகமான கூட்டத்தை என்னால் சேர்க்க முடியும்.. மாநாட்டுக்கு வந்தவர்கள் எல்லோரும் அந்த கட்சிக்கு ஓட்டு போட மாட்டார்கள்’ என தெரிவித்திருக்கிறார்.
