Connect with us

Cinema News

நாயகன், வில்லன், நகைச்சுவை என திரையுலகில் வலம் வந்தவரின் வாழ்க்கையில் காலம் செய்த கோலம்

தமிழ்சினிமாவில் பன்முகத்திறன் கொண்டு ஜொலித்த நட்சத்திரங்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஒரு சிலர் அந்தந்த காலகட்டங்களில் துருவ நட்சத்திரமாகத் தோன்றி மறைந்து போனதும் உண்டு. அப்படிப்பட்டவர்களில் ஒருசிலரைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

நாயகன், வில்லன், நகைச்சுவை என பன்முகத்திறன் கொண்டு தமிழ்த்திரையுலகில் ஜொலித்தவர். நடிகர், இயக்குனர் விசுவின் தம்பி. இவரது குரல் வளம் ரசிகர்களை ரொம்பவே ரசிக்க வைத்தது. நடிப்பிலும் தனி முத்திரை பதித்தார். அவர் தான் கிஷ்மு. இவரது வாழ்க்கை வரலாற்றைப் பற்றி பார்ப்போம்.

1947 நெல்லை மாவட்டம் களக்காட்டைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் ராமசாமி என்பவருக்கும், ராஜம் அம்மாளுக்கும் சென்னை அம்பத்தூரில் 3வது மகனாகப் பிறந்தார் கிஷ்மு. இவரது இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. இவருடன் ராஜா மணி, விசு ஆகிய அண்ணன்கள், நரசிம்மன் என்ற தம்பி, புவனேஸ்வரி என்ற தங்கையும் உடன்பிறந்தனர். தந்தை ராமசாமி இந்திய சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தில் அதிகாரியாக இருந்தார்.

பள்ளிப்படிப்பை முடித்த கிஷ்மு, டிப்ளமோவில் எலக்ட்ரிகல் படிப்பை முடித்தார். சிறுவயதிலேயே வீட்டின் வரவு செலவு கணக்குகளை செவ்வனே கவனித்தார். யாரிடமும் அதிகம் பழகாதவர். பழகினால் இவர் ஒரு பாசக்காரர். சென்னை பாடியில் உள்ள டிவிஎஸ் கிளை நிறுவனத்தில் எலெக்ட்ரிகல் போர்மேனாக பணிபுரிந்தார். 1968ல் தந்தை காலமானார். அதன்பிறகு மிகுந்த கண்டிப்புடன் இருக்க வேண்டிய பொறுப்புக்குள் ஆளானார். குடும்பத்தின் மொத்த பொறுப்பையும் தனக்குள் கொண்டு வந்தார்.

kishmu

நண்பர் மௌலியுடன் சேர்ந்து ராஜாமணியும், விசுவும் நாடகங்களை அரங்கேற்றினர். அப்போது சகோதரர்களின் ஆலோசனையின் பேரில் பள்ளி நாட்கள் போக மீதமுள்ள நாள்களில் கிஷ்மு அந்தக்குழுவின் நிர்வாகப் பொறுப்புகளைக் கவனித்து வந்தார். இந்நிலையில் விசு தான் நாடகங்களை எழுதினார். அதுவும் பள்ளி நாட்களிலேயே எழுதி அசத்தலாக அரங்கேற்றமும் செய்தனர்.

சென்னையில் பிரபலமாக இயங்கி வந்த ஒய்ஜிபி நாடகக்குழுவில் இணைந்தும் கிஷ்மு சகோதரர்கள் நடித்து வந்தனர். 4 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்தமாக நாடகங்கள் நடத்த ஆர்வம் கொண்டனர். அதன்காரணமாக 1972ல் விஸ்வசாந்தி என்ற பெயரில் நாடகங்களை நடத்தினர். நிர்வாகப் பொறுப்புகளைக் கவனித்துக்கொண்டே மேடை நாடகங்களிலும் பிரதான வேடம் ஏற்று நடிக்க ஆரம்பித்தார் கிஷ்மு. உறவுக்குக் கைகொடுப்போம், ஈஸ்வர அல்லா பேரில்லா, அவர்களுக்கு வயது வந்துவிட்டது, பாரத மாதருக்கு ஜே ஆகிய குடும்ப நாடகங்கள் அரங்கேறின.

விசுவின் மோடி மஸ்தான் என்ற நாடகம் இயக்குனர் பாலசந்தரின் தயாரிப்பில் மணல் கயிறு என்ற திரைப்படமாக உருவெடுத்தது. இந்தப்படத்தில் தான் துர்காவாக நடித்து கிஷ்மு அறிமுகமாகி நகைச்சுவையில் அதகளப்படுத்தினார். அப்பாவி முகத்தை முன்னோக்கி வைத்துக்கொண்டு சற்று கூன் போட்ட நடையுடன் இவர் நடக்கும் மேனரிசம் பார்ப்பவர்களை கொல்லென்று சிரிக்க வைத்தது.

samsaram athu minsaram

காதுகேட்காத தனது மூத்த அண்ணன் ராஜாமணியிடம் சென்று கத்தி கத்தி பேசும் இவரது அசுரத்தனமான நடிப்பை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. அப்போது இவர் பேசும் டயலாக் இதுதான். அவ்வளவாக கேட்கலையா, அவ்வளவும் கேட்கலையா… என்ற இந்த வசனம் மிகவும் பிரபலமானது. முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி நட்சத்திரமானார்.

இன்று வரை இந்தப்படத்தை யாராலும் மறக்க முடியாது. விசுவின் படமான கண்மணி பூங்கா படத்தில் நடித்தும் அசத்தினார். காத்தாடியின் ராமமூர்த்தியின் டௌரி கல்யாணம் விசுவின் கதை வசனத்தில் அதே பெயரில் திரைப்படமாக வெளியானது. அதில் கிஷ்மு நடித்து அசத்தியிருப்பார்.

சம்மந்தி புஷ்பலதாவின் அப்பாவி கணவராக கிஷ்மு மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி நகைச்சுவையில் பின்னி பெடலெடுத்திருப்பார். சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசுவின் சம்பந்தியாக ஆல்பர்ட் பெர்ணான்டஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வெளுத்து வாங்கியிருப்பார்.

இந்தப்படத்தில் கண்ணம்மா என அடிக்கடி மனோரமாவுடன் மோதி குபீர் சிரிப்பை வரவழைப்பார். டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து தனது பணியைத் துறந்துவிட்டு சகோதர்களுடன் நாடகங்களைக் கவனிக்கத் தொடங்கினார். 1982ல் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் 1992 வரை நடித்து தனி முத்திரை பதித்தார். பல்வேறு தரப்பட்ட படங்களில் நிறைவான நடிப்பைத் தந்து அசத்தினார்.

viveka, vinoth

இவர் சாவித்ரியை மணந்தார். 17 வருடங்கள் வரை குழந்தைப்பாக்கியம் இல்லாமல் 18ம் வருடத்தில் பெண்குழந்தை பிறந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்ததால் விவேகா என்று பெயர்சூட்டி மகிழ்ந்தார். இவரது மகள் விவேகாவை தந்தை கிஷ்மு ஸ்தானத்தில் வினோத்துக்கு தாரை வார்த்துக் கொடுத்து தனது கடமையை நிறைவு செய்தார் குர்ய கோஸ் ரங்கா. குழந்தையின் ஒரு வயதிலேயே கிஷ்முவை மரணம் தழுவியது. 1994, நவ.10ல் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top