அயராது உழைத்தால் வெற்றி உறுதி.. அஜித் உதாரணம்! பட விழாவில் மணிகண்டன் பேட்டி

by Rohini |
manikandan
X

சமீபகாலமாக சினிமாவில் புதுமுகங்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. முன்பெல்லாம் ரஜினி, கமல், விஜய், அஜித் , சூர்யா இவர்களின் படங்களுக்குத்தான் அமோக வரவேற்பு இருக்கும். ஏனெனில் ஆரம்பத்தில் மாஸ், ஆக்‌ஷன் போன்றவற்றின் மீது ரசிகர்களின் ஆர்வமும் இருந்து வந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் மாஸ் காட்சிகளை விட நல்ல கதை இருக்கிறதா என்பதை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

அப்படி நல்ல கதைக்களத்தோடு படம் வேண்டுமென்றால் சின்ன பட்ஜெட் நடிகர்களை வைத்துதான் படத்தை எடுக்க முடியும். அதற்கு என சில நடிகர்கள் இருக்கிறார்கள். ஹரீஸ் கல்யாண், கவின், மணிகண்டன் போன்றவர்களை குறிப்பிடலாம். கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள் நடித்த படங்கள்தான் சினிமாவில் அதிகளவு பேசப்பட்டன. தொடர்ந்து வெற்றிகளை கொடுத்த வண்ணம் இருந்தனர்.

அதிலும் மணிகண்டனை யாரென்றே தெரியாமல் இருந்தது. ஜெய்பீம் படத்தில் கூட ஒரு கேரக்டர் என்றுதான் அவரை கடந்து வந்திருப்போம். ஆனால் அந்தப் படத்திற்கு பிறகு குட் நைட் என்ற படத்தை கொடுத்து தான் யார் என்பதை உணர்த்தினார். குட் நைட் திரைப்படம் அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான திரைப்படமாக இருந்தது. மாபெரும் வெற்றியும் பெற்றது.

அதனை அடுத்து லவ்வர் திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்து அந்தப் படமும் ஓரளவு பேசப்பட்டது. அதற்கு அடுத்த படியாக குடும்பஸ்தன் என்ற படத்தில் நடித்துள்ளார் மணிகண்டன். அந்தப் படத்தின் பட விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அப்போது இந்தப் படத்தை பற்றியும் படத்தில் நடித்த கலைஞர்களை பற்றியும் பேசியிருந்தார். அப்போது பத்திரிக்கையாளர்கள் அவரிடம் அஜித் ரேஸ் பற்றி கேட்ட போது ‘இப்போது இது தேவையில்ல. இருந்தாலும் சொல்கிறேன். ஆனால் இதோடு ஸ்டாப் பண்ணிக்கோங்க’ என தன்மையுடன் கூறி அஜித்தை பற்றி பேசினார். அவர் கூறும் போது,

அஜித் பல தலைமுறைகளுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். எப்பொழுதுமே தன்னுடைய பேஸனை கைவிட்டதே இல்லை. அதற்கான பலன்கள் அவருக்கு கிடைக்கிறது என்பது எனக்கு இன்னும் உத்வேகமாக உள்ளது. இலக்குகளை அடைய தொடர்ந்து உழைத்தால், ஒரு நாள் நமக்கு வெற்றி கிடைக்கும் என்பதற்கு அஜித் ஒரு உதாரணம் என மணிகண்டன் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

Next Story