Categories: Cinema News latest news throwback stories

நான் சினிமாவுக்கு வந்தது இப்படித்தான்!.. முரளி சொன்ன சுவாரஸ்ய பிளாஷ்பேக்…

தமிழ் சினிமாவில் ‘பூ விலங்கு’ திரைப்படம் மூலம் நடிகரானவர் முரளி. விஜயகாந்துக்கு அடுத்து கருப்பான நிறம் உடைய ஹீரோ இவர்தான். பல படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி நடிகராகவும் மாறினார். 80 மற்றும் 90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர். குறிப்பாக காதல் கதைகளில் அதிகம் நடித்த நடிகர் இவராகத்தான் இருப்பார். அதுவும் ஒருதலை காதலின் வலியை முகத்தில் அழகாக கொண்டு வருபவர்.

murali

இதயம் படத்தில் முரளி வெளிப்படுத்திய நடிப்பு ஒருதலை காதலில் தோல்வியை சந்தித்த பலரையும் உலுக்கியது. அதேபோல், காலமெல்லாம் காதல் வாழ்க, உன்னுடன் என பல படங்களிலும் காதலின் வலியை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். பல ஆக்‌ஷன் படங்களிலும் முரளி நடித்துள்ளார். இவரின் மகன் அதர்வாவும் நடிகராக மாறிவிட்டார்.

murali

முரளியின் அப்பா சித்தலிங்கையா கன்னட சினிமாவில் கதாசிரியர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருந்தவர். தான் சினிமாவுக்குள் நுழைந்தது எப்படி என்பது பற்றி ஒரு பேட்டியில் பேசிய முரளி ‘என் அப்பா இயக்கிய சில படங்களில் நான் உதவியாளராக வேலை செய்தேன். எனக்கு இயக்குனராக வேண்டும் என்பதுதான் ஆசை. படப்பிடிப்பில் நடிகர்களுக்கு வசனம் பேசுவது எப்படி என சொல்லிகொடுப்பேன். அதை கவனித்த என் அப்பா ‘நீ நன்றாக நடிப்பு சொல்லி கொடுக்கிறாய். நீயே ஏன் நடிக்க கூடாது’ என ஒருநாள் கேட்டார்.

 

அப்போது கன்னடத்தில் எந்த ஹீரோவும் கருப்பாக இருக்க மாட்டார்கள். எனவே, என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என சொன்னேன். ஆனாலும் அவர் வற்புறுத்தினார். எனவே, நாமும் நடிப்போம் என ஆசைப்பட்டு Geluvina Hejje என்கிற படத்தில் நடித்தேன். அதன்பின் Prema Parva என்கிற படத்தில் நடித்தேன். அந்த படம் ஹிட் அடித்தது. அதைத்தான் தமிழில் ‘பூ விலங்கு’ என எடுத்தார்கள்’ என முரளி அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

நடிகர் முரளி 2010ம் வருடம் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
சிவா