அந்த படத்த காசு கொடுத்து ஓட்டிடலாம்னு நினைச்சேன்!.. இப்படி ஓப்பனா சொல்லிட்டாரே ரஜினி!..
Ilayaraja: நடிகர் ரஜினியின் பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா
. 80களில் ரஜினி நடித்த 95 சதவீத படங்களுக்கு இளையராஜாவே இசையமைத்து பல இனிமையான பாடல்களை கொடுத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் இளையராஜாவுக்கும் ரஜினிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். கடந்த 30 வருடங்களாகவே ரஜினியின் படங்களுக்கு இளையராஜா இசையமைப்பது இல்லை.
ஆனாலும் இளையராஜாவுடன் நல்ல நட்பும், மரியாதையும் பாராட்டி வருகிறார் ரஜினி. அவ்வப்போது இளையராஜாவை நேரில் சந்திப்பது.. அவர் தொடர்பான விழாக்களில் கலந்து கொள்வது என ரஜினி எதையும் விட்டதில்லை. நேற்று தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவிலும் ரஜினி கலந்து கொண்டார். அந்த விழாவில் ரஜினி ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார்.
ஒருமுறை இளையராஜா என்னிடம் வந்து ‘என் அண்ணன் பாஸ்கரின் தயாரிப்பில் நீங்கள் ஒரு படம் நடிக்க வேண்டும்’ என கேட்டார். உடனே சம்மதம் சொன்னேன். அப்படி உருவான படம் ராஜாதி ராஜா. அப்படத்தின் இயக்குனர் சுந்தர்ராஜன் பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் எனக்கு அவரைப் பற்றி சரியாக தெரியாது. ஷூட்டிங் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. என்னை பார்க்க பாஸ்கர் வரும் போதெல்லாம் படத்தைப் பற்றி எதுவுமே பேச மாட்டார்.
‘இன்னைக்கு கிளைமேட் நல்லாருக்கு. உங்களுக்கு இட்லி மட்டன் குழம்பு’ என பேசுவார். ஒருபக்கம் சுந்தர்ராஜனுக்கும் எனக்கு செட் ஆகவில்லை. என்னிடம் எதுவும் சொல்ல மாட்டார். எனவே எனக்கு இந்த படம் எப்படி வருமோ என்கிற பயம் ஏற்பட்டு விட்டது. இளையராஜாவிடம் சென்று என்னுடைய தயக்கத்தை கூறினேன். என்னை பார்த்து சிரித்த அவர் ‘இந்த படம் சில்வர் ஜூப்ளி (25 வாரங்கள்) ஓடவில்லை என்றால் நான் ஆர்மோனியம் வாசிப்பதையே நிறுத்தி விடுகிறேன். நீங்கள் எதை பற்றியும் யோசிக்காமல் நடியுங்கள்’ என சொன்னார். ‘ஏன் சாமி இப்படி எல்லாம் சொல்றீங்க?’ என எனக்கு தூக்கி வாரி போட்டது.
இளையராஜா சொன்னால் செய்து விடுவார். எனவே இந்த படம் கண்டிப்பாக சில்வர் ஜூப்ளி அடிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இரண்டு தியேட்டர்களில் நாமே காசு கொடுத்து சில்வர் ஜூப்ளி ஓட வைத்துவிட வேண்டும் என்றெல்லாம் நான் முடிவு செய்து விட்டேன் ஆனால் ராஜாதி ராஜா படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சில தியேட்டர்களில் அவர் சொன்னது போலவே சில்வர் ஜூப்ளி ஓடியது. இளையராஜா சரியாக கணிப்பார். அப்படி ஒரு திறமையும், ஞானமும் கொண்டவர்’ என ரஜினி பேசி இருக்கிறார்.
