சிவாஜி படத்தில் நடிக்காமல் போனதுக்கு இதுதான் காரணம்!.. சத்யராஜ் சொல்றது உண்மையா?..
Sathyaraj: நடிகர் சத்யராஜ் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் என்ன வேஷம் கிடைத்தாலும் நடித்தார். பெரும்பாலும் வில்லனின் அடியாட்களில் ஒருவராக வருவார். அதிலும் ‘எஸ் பாஸ்’ என்கிற ஒரு வசனம் மட்டும்தான் அவருக்கு கிடைக்கும். சத்யராஜின் திரை வாழ்க்கையை மாற்றியவர் மணிவண்ணன். அவர் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த நூறாவது நாள் படம் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது
. சத்யராஜுக்கு என ஒரு தனி ஸ்டைலை உருவாக்கினார் மணிவண்ணன்.
ஒருபக்கம் வயதான அப்பா வேடத்தில் வில்லனாக நடிப்பார் சத்யராஜ். ரஜினி நடித்த மிஸ்டர் பாரத் படத்தில் கூட அவரின் அப்பாவாக நடித்திருப்பார். ரஜினியின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த சத்யராஜ் ஒரு கட்டத்தில் அவரின் அவரின் படங்களின் நடிப்பதை நிறுத்தி விட்டார். மேலும் ரஜினியை மிகவும் கடுமையாகவே தனது நண்பர்கள் வட்டாரத்தில் விமர்சிப்பார் சத்யராஜ்.
ரஜினி படத்தில் வில்லனாக நடிக்க கூப்பிட்டால் ‘நாங்க கஷ்டப்பட்டு நடிப்போம்.. ஆனால் அவர் வந்து ஸ்டைலா ஏதாவது பண்ணிட்டு பேர் வாங்கிட்டு போயிடுவாரு’ என கமெண்ட் அடித்து அந்த வாய்ப்பை மறுத்து வந்தார் சத்யராஜ். ஏவிஎம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்திலும் வில்லனாக நடிக்க சத்யராஜுக்கு வாய்ப்பு வந்தது. அப்போதும் அதையே சொல்லி வாய்ப்பை மறுத்தார் சத்யராஜ். அதோடு ‘நான் ஹீரோவா நடிக்கிற படத்துல ரஜினி வில்லன் நடிப்பாரா?’ என்றெல்லாம் அவர் கேட்டதாக செய்திகள் வெளியானது.
மொத்தத்தில் ரஜினி மீது எப்போதும் காண்டாகவே இருந்தார் சத்யராஜ். ஆனால் தற்போது அவரின் மனநிலை மாறி இருக்கிறது. லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி படத்தில் அவரின் நண்பராக நடித்திருக்கிறார். கூலிப்பட ஆடியோ விழாவில் பேசிய ரஜினி ‘சிவாஜி படத்தில் எனக்கு நிகரான சம்பளத்தை கொடுப்பதாக சொல்லியும் சத்யராஜ் நடிக்கவில்லை. ஆனால் இந்த படத்தில் என்னோடு நடித்திருக்கிறார்’ என பேசி இருந்தார்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய சத்யராஜ் ‘சிவாஜி படத்தில் என்னை வில்லனாக நடிக்க ஷங்கர் கேட்டார். அப்ப மார்க்கெட் இறங்கிட்டு இருந்த ஒரு ஹீரோவா நான் இருந்தேன்.. ஏதாவது ஒரு படம் ஹிட் அடிச்சி ஹீரோவா தாக்கு பிடிக்கணும்னு நான் தடுமாறி இருந்த ஸ்டேஜ் அது.. அதனாலதான் அவர்கிட்ட ‘இப்ப நிலைமை ரொம்ப மோசமா இருக்கு.. ஒரு படம் கிடைச்சிடுமான்னு பாத்துட்டு இருக்கேன். இந்த நேரத்தில் வில்லனா நடிச்சா அப்புறம் தொடர்ந்து வில்லனாதான் கூப்பிடுவாங்க’ என சொல்லிவிட்டேன். ஆனா இந்த மீடியாவில் என்னென்னவோ சொல்லிட்டாங்க’ என விளக்கம் அளித்து இருக்கிறார்.
