Categories: Cinema News latest news throwback stories

சுருளிராஜன் வாங்கிய முதல் 100 ரூபாய் சம்பளம்!.. அட மனுஷன் இப்படியெல்லாமா செய்வாரு!..

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சுருளிராஜான். எம்.ஆர்.ராதாவை போலவே தனித்துவமான குரலுக்கு சொந்தமானவர். சினிமா பின்புலம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் நுழைந்தவர் இவர். மதுரையில் வசித்தபோது பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். அப்படியே சினிமா ஆசை வர சென்னை வந்தார். எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை படத்தில் வேலைக்காரராக அறிமுகமானார்.

அதன்பின் பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். இவர் நடித்த மாந்தோப்பு கிளியே படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.

இவருக்கு முதன் முதலில் பேர் வாங்கி கொடுத்த திரைப்படம் ‘காதல் படுத்தும் பாடு’. இந்த படத்தில் நடிப்பதற்காக அவருக்கு முன் தொகையாக ரூ.100 கொடுக்கப்பட்டது. சுருளிராஜன் முதன் முதலாக நூறு ரூபாய் நோட்டை அப்போதுதான் பார்த்தாராம். ஏனெனில், அவரின் பெற்றோர்கள் இறந்துபோய்விட அண்னன் வீட்டில் வசித்து வறுமையில் வாடியவர் இவர். எனவே, அந்த ரூபாய் நோட்டை தொட்டு தொட்டு பார்த்து சந்தோஷப்பட்டாராம்.

வீட்டிற்கு கிளம்பி செல்லும் போது அவரிடம் அந்த 100 ரூபாய் நோட்டை தவிர வேறு பணம் இல்லை. சினிமா கம்பெனியிலிருந்து அவரின் வீடு பல கிலோ மீட்டர் தூரம் இருந்தது. அவர் நினைத்தால் அந்த பணத்தில் பேருந்திலோ அல்லது வாடகை காரிலோ கூட சென்றிருக்க முடியும். ஆனால், அதற்காக அந்த 100 ரூபாய் நோட்டை மாற்ற வேண்டியிருக்கும். அந்த நோட்டை தனது நண்பர்களிடம் காட்டி ஆச்சர்யப்படுத்த வேண்டும் என நினைத்த சுருளிராஜன் பல மைல் தூரமுள்ள தனது வீட்டிற்கு நடந்தே போனாராம்.

அதற்குபின் அவர் எவ்வளவோ சம்பாதித்தாலும் அந்த 100 ரூபாய் கொடுத்த மகிழ்ச்சி அவரால் முறக்க முடியாத ஒன்றாகவே கடைசி வரை இருந்திருக்கிறது.

காதல் படுத்தும் பாடு திரைப்படம் 1966ம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

Published by
சிவா