ஆரம்பப் புள்ளி தேவா சார் கொடுத்தது ... பழசை மறக்காத சூர்யா
நடிகர் சூர்யா நடித்துள்ள சீன் திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சூர்யா, மறைந்த இசையமைப்பாளர் தேவாவை நினைவுகூர்ந்து உருக்கமாக பேசியது ரசிகர்களை நெகிழ வைத்தது.
விஸ்வ நாத் அண்ட் சன்ஸ் மிகப்பெரிஅய் வெற்றிக்கு பின் சூர்யா நடிப்பில் அடுத்து வரும் படம் சீன். இப்படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா, நஸ்லென், ஆனந்த்ராஜ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரோமாஞ்சம் , ஆவேஷம் ஆகிய மலையாளப் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ஜித்து மாதவன் இப்படத்தை இயக்கியுள்ளார். இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார்.
சீன்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. ஏற்கெனவே துபாயில் படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், சென்னை விழாவிலும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். விழாவைத் தொடர்ந்து படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, தனது திரைப்பயணத்தின் ஆரம்பகாலத்தை நினைவுகூர்ந்தபோது இசையமைப்பாளர் தேவாவைப் பற்றி பேசினார்.
தேவா சார் குடும்பத்தாருக்கு என்னுடைய அனுதாபங்களை சொல்லிக்கிறேன். இந்தப் பயணத்தை ஆரம்பித்து வைத்ததற்கு நன்றி. நேருக்கு நேர் படத்தில் அவள் வருவாளா என்ற நீங்கள் போட்ட பாடல்கள்தான் இன்றும் போய்க்கொண்டே இருக்கின்றன. என்னுடைய ஆரம்பப் புள்ளியை தேவா சார்தான் கொடுத்தார். உங்களை எப்போதுமே ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பேன் தேவா சார் என சூர்யா உருக்கமாக தெரிவித்தார்.
சூர்யா நடிப்பில் 1998-ம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். அந்தப் படத்தின் பாடல்கள் சூர்யாவின் ஆரம்பகால திரைப்பயணத்தில் ரசிகர்களிடம் அவரைக் கொண்டு சேர்த்த முக்கிய படைப்புகளில் ஒன்றாக அமைந்தன. குறிப்பாக அந்த படத்தில் இடம்பெற்ற அவள் வருவாளா, எங்கெங்கு என்ற பாடலகள் மிகப்பெரிய ஹிட் அடித்தன. பல ஆண்டுகள் கடந்த பிறகும் தனது ஆரம்பகால வெற்றியில் தேவாவின் பங்களிப்பை மறக்காமல், அவருக்கு சூர்யா நன்றி தெரிவித்த தருணம் விழாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே சீன் படத்தில் சூர்யா இன்பராஜ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஆக்ஷன், காமெடி மற்றும் டார்க் ஹியூமர் கலந்து வித்தியாசமான படமாக இது உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
