
Cinema News
OG: சிம்பு பாடிய 2 பாட்டையும் தூக்கிய இசையமைப்பாளர்!.. வாய்ப்பு கொடுக்காத கோபமா?….
STR49: சினிமாத்துறை என்றாலே எல்லாவற்றுக்கும் அடிப்படை வாய்ப்புதான். ஒரு நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், உதவி இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஒருவர் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அந்த வாய்ப்பை பயன்படுத்தி தன் திறமையை நிரூபித்தால் மட்டுமே தொடர் வாய்ப்புகள் கிடைக்கும்.
இது ஒருபுறம் எனில், ஏற்கனவே வாய்ப்பு கிடைத்த பிரபலமானவர்களும் பெரிய பிரபலங்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என ஆசைப்படுவார்கள். சிலருக்கு அது நடக்கும். பலருக்கும் அது நடக்காமலே போயிருக்கிறது. விஜயோடு ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என பல இளம் நடிகைகள் ஆசைப்பட்டனர். ஆனால், எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை விஜய்க்கே இருந்தது. ஆனால், அது நடக்கவே இல்லை.
இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமானவர் தமன். அந்த படத்திற்கு பின் அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனால், இசையமைப்பாளராக மாறினார். குறிப்பாக தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இவர்தான் இசையமைப்பாளர். தமிழிலும் சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
நடிகர் சிம்புவுடன் இவருக்கு நல்ல நட்பு உண்டு. அவர் நடிப்பில் வெளிவந்த ஒஸ்தி படத்தில் தமனே இசையமைத்திருந்தார். அதன்பின் அவர் சிம்பு படத்துக்கு இசையமைக்கவில்லை. இந்நிலையில்தான் பவன் கல்யாண் நடிப்பில் உருவான OG படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் 2 பாடல்களை பாடுமாறு நட்பு அடிப்படையில் தமன் கேட்க சிம்புவும் பாடிக்கொடுத்தார். ஆனால், தியேட்டரில் படம் பார்த்தபோது அந்த பாடலை வேறு ஒருவர் பாடியிருந்தார். இதைக்கண்டு சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் அதற்கான காரணம் வெளியே கசிந்திருக்கிறது. தமனுக்கு அனிருத்தை பிடிக்கவே பிடிக்காதாம். சில நாட்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் ‘OG படத்தில் என் இசையை கேளுங்கள். அனிருத்தெல்லாம் சும்மா’ என்கிற ரேஞ்சுக்கு பேசியிருக்கிறார். சிம்பு-வெற்றிமாறன் படம் உறுதியானதும் அதில் தான் இசையமைக்க ஆசைப்படுவதாக தமன் சொல்லி இருக்கிறார். ஆனால், சிம்பு அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது அந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பது உறுதியாகியுள்ளது.
வெற்றிமாறனுக்கு முன்பு பார்க்கிங் பட இயக்குனர் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படத்திலும் தனக்கு வாய்ப்பு கொடுக்கும்படி சிம்புவிடம் தமன் கேட்க சிம்பு அப்போதும் அதை கண்டுகொள்ளவில்லை. அந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டார். இப்படி 2 படங்களிலும் தனக்கு வாய்ப்பு இல்லாமல் போன கோபத்தில்தான் OG படத்தில் சிம்பு பாடிய 2 பாடல்களையும் தமன் தூக்கிவிட்டு வேறு ஒரு பாடகரை பாட வைத்திருக்கிறார் என சொல்லப்படுகிறது.