இவ்ளோ பில்டப்பு தேவையா?!. என்னை காலி பண்ணனும்னு முடிவு பண்ணீட்டீங்களா!.. கோபப்பட்ட விஜய்!..

0
94

சினிமாவில் ஒருவரை ஹீரோவாக ரசிகர்களின் மனதில் பதிய வைக்க வேண்டுமெனில் அவரை பில்டப் செய்ய வேண்டும். அவர் சாகசங்கள் செய்ய வேண்டும். தப்பை தட்டி கேட்க வேண்டும். 100 ரவுடிகளை புரட்டி எடுக்க வேண்டும். 10 அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து கீழே குதித்தாலும் அவருக்கு எதுவும் ஆகாது.. 20 ரவுடிகள் துப்பாக்கியால் அவரை சுட்டாலும் குண்டு அவர் மேல் படவே படாது.

ஆனால், ஹீரோ சுட்டால் ரவுடிகளின் உடலில் அது பட்டு அவர்கள் கீழே விழுவார்கள். இப்படி பல காட்சிகளை இப்போதும் சினிமாக்களில் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். இது இன்னும் பல வருடங்களுக்கு மாறாது. ஏனெனில், சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவை இப்படித்தான் காட்ட வேண்டும் என இயக்குனர்கள் ஒரு ஃபார்முலா வைத்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவே இப்படி என்றால் தெலுங்கு சினிமா பக்கம் எல்லாம் போனால் சொல்லவே தேவையில்லை. துப்பாக்கியிலிருந்து வரும் குண்டை வாயால் கடித்து வில்லன் மீது ஹீரோ துப்ப அவன் குண்டடி பட்டு இறக்கும் காட்சிகள் எல்லாம் இருக்கிறது. பில்டப் என்றால் எப்படி இருக்க வேண்டும் என தெரிய விரும்பினால் பாலகிருஷ்ணா படங்களை பார்த்தால் தெரியும்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினியை தொடர்ந்து விஜய், அஜித், ராகவா லாரன்ஸ் போன்ற நடிகர்கள் பில்டப் காட்சிகளில் அதிகம் நடிப்பார்கள். பொதுவாக பில்டப் காட்சிகளில் நடிப்பதற்கு விஜய் விரும்ப மாட்டாராம். இன்னும் சொல்லப்போனால் அப்படி நடிக்கவே கூச்சப்படுவாராம்.

ஆனால், இயக்குனர்களும், சண்டை காட்சி இயக்குனர்களும் வற்புறுத்தினால் மட்டுமே அப்படி நடிப்பாராம். சுறா படத்தின் அறிமுக காட்சியில் கடலில் இருந்து அவர் பாய்ந்து மேலே வருவது போன்ற காட்சி அப்போது ட்ரோலுக்கு உள்ளானது. இப்போதுவரை அதை மீம்ஸாக பலரும் பயன்படுத்தப்படுவது உண்டு.

சமீபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் கொடுத்த பேட்டியில் ‘பகவதி படத்தில் ஒரு காட்சியில் காலை ஸ்டைலாக தூக்கி வைத்து விஜய் வசனம் பேச வேண்டும். ஆனால் ‘என்ன மாஸ்டர் என்னை காலி பண்ண பாக்குறீங்களா?. நான் இதெல்லாம் பண்ண மாட்டேன். இவ்ளோ மாஸ் காட்சிலாம் எனக்கு வேண்டாம்’ என சொன்னார் விஜய். ஆனால், நான் வற்புறுத்தி அந்த காட்சியில் அவர நடிக்க வைத்தேன்’ என சொல்லி இருந்தார்.

google news