அதிமுக பொதுக்குழு கூட்டம்! - 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கு ஒப்புதல்!

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை வானகரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை ஏற்றார். ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி,அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ‘தமிழ்நாட்டின் ஆபிரகாம் லிங்கனாக முதல்வர் பழனிச்சாமி செயல்படுகிறார் என புகழந்தார். அதேபோல், அக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி ‘ இராமர், லட்சுமணர் போல் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். மருது சகோதரர்கள் போல அவர்கள் இருவரும் இணைந்து வெற்றியை பெறுவார்கள் என பாராட்டினார்.
இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை ஏகமனதாக தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2500 வழங்கியதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தது உட்பட இந்த பொதுக்குழுவியில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக தமிழக அரசின் சிறப்பான் நிர்வாகத்தை இழிவாக விமர்சித்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் நிறைவேற்றப்பட்டது. அதோடு, 2021 சட்டமன்ற தேர்தலின் போது தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு எடுக்க ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானங்களுக்கு 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு ஒப்புதல் அளித்தது. வழிகாட்டுதல் குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம், ஆர்.காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ ஏ.சி.டி பிரபாகர், முன்னாள் எம்.பி பி.எச் மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் பா.மோகன், முன்னாள் எம்.பி கோபால கிருஷ்ணன், சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.