ராஜமெளலியின் வாரணாசியை தொடர்ந்து அடுத்த பிரம்மாண்டம்!.. பிருத்விராஜ் பலே ஆளுதான்!..

 
odiyan

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘ஓடியன்: தி ஏஜ் ஆஃப் இல்லூஷன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நாட்டுப்புற திகில் மற்றும் உளவியல் திரில்லர் அம்சங்களுடன் உருவாகும் இந்த திரைப்படத்தை, பெரும் வரவேற்பைப் பெற்ற பிரம்மயுகம் படத்தின் இயக்குநரான ராகுல் சதாசிவன் இயக்குகிறார்.

மலையாள சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தில் பிருத்விராஜுடன் இணைந்து மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வலுவான கதைக்களம் மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகும் இப்படம், இந்திய அளவில் கவனம் ஈர்த்துள்ள திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ராமா ப்ரொடக்‌ஷன், ப்ரித்விராஜ் ப்ரொடக்‌ஷன் நிறுவனத்துடன் இணைந்து மலையாளத் திரைப்படத் துறையில் தனது முதல் தயாரிப்பு முயற்சியை மேற்கொள்கிறது. இப்படத்தை கரண் ஜோஹர், ஆதார் பூனாவாலா, அபூர்வா மேத்தா மற்றும் சுப்ரியா மேனன் உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர்.

19-ஆம் நூற்றாண்டு கேரளாவின் பின்னணியில் அமைந்துள்ள இப்படம், உருமாறும் சக்தி கொண்டதாக நம்பப்படும் ‘ஓடியன்’ என்ற மர்மமான நபரை மையமாகக் கொண்டு நகர்கிறது. கேரள நாட்டுப்புறக் கதைகளில் இடம்பெறும் இந்த புராணக் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் கதை, ஒரு சக்திவாய்ந்த பெண்வழிச் சமூகத்தின் வாழ்வில் நிகழும் மாற்றங்களையும், உண்மை மற்றும் மாயை இடையே நடைபெறும் விறுவிறுப்பான மோதல்களையும் சித்தரிக்கவுள்ளது.

திகில், மர்மம் மற்றும் நாட்டுப்புற புராணம் இணைந்துள்ள ‘ஓடியன்: தி ஏஜ் ஆஃப் இல்லூஷன்’, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்திய அளவில் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

‘பிரம்மயுகம்’ படத்தின் மூலம் தனித்துவமான கதை சொல்லல் பாணியை வெளிப்படுத்திய ராகுல் சதாசிவன், இந்த புதிய படத்தின் மூலமும் இந்திய சினிமா ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

Tags

From Around the web