தன்னுடைய அடுத்த பட இயக்குனரை அறிவித்த அட்லீ! தமிழில் மீண்டும் அந்த கூட்டணியா?
அட்லி:
தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இயக்குனராக இருப்பவர் இயக்குனர் அட்லி. ராஜா ராணி படத்தின் மூலம் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு முன்பு வரை சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். அதன்படி எந்திரன், நண்பன் போன்ற படங்களில் அட்லி ஒரு உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். ராஜா ராணி படத்தின் வெற்றி இவரை தமிழ் சினிமாவில் அடையாளம் காட்டியது.
அதனைத் தொடர்ந்து விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து அசத்தினார். அதிலிருந்து விஜய்க்கு ஆஸ்தான இயக்குனர் அட்லி என்ற பெயரும் அவருக்கு கிடைத்தது. பிகில் திரைப்படத்திற்கு பிறகு அடுத்து என்ன படத்தை இயக்கப் போகிறார் என அனைவரும் ஆர்வமுடன் காத்திருக்க திடீரென பாலிவுட்டில் இறங்கி ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கினார்.
உலகளவில் கவனிக்கப்பட்ட அட்லீ:
அந்த படம் பாலிவுட்டில் பெரிய வசூல் சாதனையை படைத்தது. ஜவான் படத்திற்கு முன்பு வரை பாலிவுட் சினிமா பாதாளத்தில் கிடந்ததைப் போல தான் இருந்தது. ஆனால் ஜவான் படத்திற்குப் பிறகு பாலிவுட்டை உலக அளவில் கொண்டு சேர்த்த பெருமை அட்லீயையே சேரும். இந்த படம் ஆயிரம் கோடி வசூல் செய்து உலக அளவில் கவனிக்கத்தக்க படமாகவும் மாறியது. இந்த வெற்றியின் எதிரொலி ஹிந்தி ஹீரோக்கள் மத்தியிலும் ஒலித்தது.
அட்லீயை நோக்கி ஹிந்தி ஹீரோக்கள் படையெடுக்க தொடங்கினர். இந்த நிலையில் தயாரிப்பாளராக களம் இறங்கினார் அட்லி. தற்போது வருண் தவான், கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து தெறி படத்தின் ரீமேக்கான மேரி ஜான் படத்தை தயாரித்திருக்கிறார். அந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் தான் தற்போது அட்லி இருந்து வருகிறார். இதற்கிடையில் சல்மான்கான், கமல்ஹாசன் ஆகிய இருவரையும் வைத்து அட்லி ஒரு படத்தை எடுக்க போவதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால் அது வதந்தியாகவே மாறிவிட்டது.
தமிழில் மீண்டும்:
அடுத்ததாக தமிழில் ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என நீண்ட காலமாக நினைத்து வந்த அட்லி ஏற்கனவே அது சம்பந்தமான பேச்சு வார்த்தையும் நடந்தது .விஜய் சேதுபதியை வைத்து படத்தை தயாரிக்கப் போவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இப்போது மேரி ஜான் படத்தின் ப்ரோமோஷனில் அது குறித்த தகவலை அட்லி வெளியிட்டு இருக்கிறார். கூடிய சீக்கிரம் விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து அந்த படத்தை தயாரிக்க போவதாகவும் அதை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் தான் இயக்கப் போகிறார் என்றும் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார் அட்லி.
ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தை எடுத்தவர் என்பதால் அந்தப் படமும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பதால் மீண்டும் இந்த கூட்டணி மீது ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.