Vadivelu: கைப்புள்ளைக்கு கட்டம் சரியில்ல.. விஜயை எதிர்த்து வடிவேலுவா? மறுபடியும் முதல்ல இருந்தா?
வடிவேலு:
தமிழ் சினிமாவில் தன்னுடைய நகைச்சுவையால் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் வடிவேலு. எந்தவொரு அரசியல் சாயமும் பூச்சிக் கொள்ளாமல் தன்னுடைய துறையில் முன்னேறி கொண்டிருந்தார். வைகைப்புயல் என அன்போடு அழைக்கப்பட்ட வடிவேலு அஜித், விஜய், ரஜினி, விஜயகாந்த், என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கிங்காக வலம் வந்தார்.
கைப்புள்ளைக்கு கட்டம் சரியில்லைனு சொல்லுவாங்க. அப்படி 2011 ஆம் ஆண்டு தங்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என திமுக-விடமிருந்து அழைப்பு வந்தது வடிவேலுவுக்கு. அந்த நேரத்தில்தான் விஜயகாந்துடன் சிறு பிரச்சினையில் இருந்தார். இதுதான் வாய்ப்பு என கருதி திமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கினார். அதே நேரம் விஜயகாந்துக்கு எதிராக கடுமையாக விமர்சித்தார்.
அமைதியாக இருந்த விஜயகாந்த்:
ஆனால் விஜயகாந்தோ வடிவேலு பேசுவதற்கு யாரும் எதிர்வினை ஆற்ற கூடாது என தனது கட்சியினருக்கு கூறிவந்தார். அதை போல் பிரச்சாரத்தில் வடிவேலுவுக்கு எதிராக ஒரு கருத்தை கூட விஜயகாந்த் முன் வைக்கவில்லை. அதை போல் அதிமுகவிற்கு எதிராகவும் வடிவேலு விமர்சித்து வந்தார். தன்னை ஒரு எம்ஜிஆராக நினைத்ததால்தான் விஜயகாந்தை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டாரோ என்றெல்லாம் விமர்சித்தார்.
போதாத காலம் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வெற்றி பெற யாரும் எதிர்பாராத வகையில் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக உட்கார்ந்தார். இது திமுகவை விட வடிவேலுவுக்கு பெருத்த அடியாக இருந்தது. நேரடியாக விஜயகாந்தோ ஜெயலலிதாவோ சொல்லவில்லை என்றாலும் வடிவேலுவுக்கு படங்களில் வாய்ப்பு கொடுக்க பல நிறுவனங்கள் தயங்கினார்கள்.
சினிமாவில் இருந்து விலகிய வடிவேலு:
கிட்டத்தட்ட 10 ஆண்டு காலம் வாய்ப்பில்லாமல் வடிவேலு இருந்தார். ஒரு சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் முன்பை போல அவருடைய படங்கள் சரியாக ஓடவில்லை. இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சியில் இருப்பதாலும் மாமன்னன் படத்தில் உதய நிதியுடன் நடித்ததனாலும் மறுபடியும் திமுகவினருடன் உறவாடி கொண்டு வருகிறார் வடிவேலு. சமீபத்தில் உதய நிதி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட போது கூட இந்த கூட்டணியை யாரும் அசைக்க முடியாது என்றெல்லாம் பேசினார்.
அவன் இவன் சண்டை போடுறதெல்லாம் எங்களுக்கு சாதகம் தான் என்றும் கூறினார். மேலும் வரும் 2026 தேர்தலிலும் ஸ்டாலின் ஐயாதான் முதல்வர் என்றும் கூறினார். மேலும் திமுகவில் நானும் ஓரமாக இருக்கிறேன். என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார். அதனால் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மறுபடியும் வடிவேலு பிரச்சாரத்தில் ஈடுபட போகிறார் என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் விஜய்க்கு எதிராக அவர் பிரச்சாரம் செய்ய போகிறார் என்றும் கூறப்படுகிறது. அதற்காக திமுகவினர் வடிவேலுவை தயார்படுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. மறுபடியும் முதல்ல இருந்தா? என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தவராக இருப்பவர் விஜய். விஜய்க்கு எதிராக வடிவேலு இருந்தால் நிச்சயமாக 2கே கிட்ஸ்கள் வடிவேலுவை சும்மா விட மாட்டார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வாங்கிய அடி பத்தலையா வடிவேலு அண்ணே!
