ஆடலாமான்னு கேட்டது குத்தமா Obsession பேயாக மாறிய ஐஸ்வர்யா லட்சுமி!..
நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு நகைச்சுவை கலந்த புரமோ வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி வெளியான 'கட்டா குஸ்தி' திரைப்படம் காதல், விளையாட்டு மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவானது. இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கிய இந்த படம், பாலின சமத்துவத்தை நகைச்சுவையுடன் பேசும் விதத்திற்காக ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்றது.
படத்தில், கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக, ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்திருந்தார். மேலும் கருணாஸ், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். ரவி தேஜா மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து படத்தை தயாரித்திருந்தனர்.
#Obsession ~ #Gattakusthi2 😁 pic.twitter.com/uEYZp93Gx2
— Christopher Kanagaraj (@Chrissuccess) June 17, 2026
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் விஷ்ணு விஷால் - செல்லா அய்யாவு கூட்டணியில் 'கட்டா குஸ்தி 2' உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படம் வரும் ஜூலை 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,அந்த வீடியோவில், ஐஸ்வர்யா லக்ஷ்மியிடம் ஒருவர் "நாம் இந்த பாடலுக்கு சேர்ந்து ஆடலாமா?" என்று கேட்கிறார். அதற்கு, சமீபத்தில் வெளியான Obsession திரைப்படத்தில் இடம்பெற்ற கதாநாயகியின் பாணியில் "நோ... நோ... நோ..." என்று அவர் பதிலளிக்கிறார். இதையடுத்து அந்த நபர் ஒரு பென்சிலை உடைத்து, "நார்மலாக" மாற்றுவது போல நகைச்சுவையாக காட்டப்படுகிறது.
உடனே மனம் மாறும் ஐஸ்வர்யா லக்ஷ்மி, "ஆடலாம்" என்று கூறி, 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'சம்பவக்காரி' பாடலுக்கு உற்சாகமாக நடனமாடுகிறார். இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
முதல் பாகத்தைப் போலவே நகைச்சுவை, குடும்ப உணர்வுகள், காதல் மற்றும் விளையாட்டு அம்சங்கள் கலந்த முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 'கட்டா குஸ்தி 2' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
