நண்பர்களுக்கு திருமண நாள் பார்ட்டி கொடுத்த அஜித்!.. வைரல் போட்டோ…
30 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் நடித்து வருபவர் அஜித்குமார். அமராவதி படத்தில் அறிமுகமாகி அதன்பின் பல படங்களிலும் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஒருகட்டத்தில் ஆக்சன் ரூட்டுக்கு மாறி தீனா, பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் ஹீரோவாகவும் மாறினார். விஜய்க்கு பின் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராகவும் அஜித் இருக்கிறார்.
கடந்த சில வருடங்களாகவே அஜித் தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். குட் பேட் அக்லி படம் வெளியாகி ஒரு வருடம் ஆகியும் அடுத்த படம் வெளியாகவில்லை. அடுத்த படத்திற்கு அஜித் 185 கோடி சம்பளம் கேட்பதால் படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை.
சமீபத்தில் கார் ரேஸுக்காக பெல்ஜியம் சென்றிருந்த அஜித் ஓட்டு போடுவதற்காக சென்னை வந்தார். அதிகாலை 6.45 மணிக்கே திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தமிழ்நாட்டிலேயே முதல் ஆளாக அஜித் வாக்களித்தார். வெள்ளை நிற கோட், சூட், கருப்பு நிற கண்ணாடி அணிந்து ஸ்டைலாக அவர் வந்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில், ஏப்ரல் 24ம் தேதியான நேற்று அஜித் தனது 26வது திருமண நாளை கொண்டாடினார். இதையடுத்து, தனக்கு நெருக்கமான நண்பர்களான இயக்குனர்கள் ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு, ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு பார்ட்டி கொடுத்திருக்கிறார். அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
