Ajith: உங்களால இவ்வளவு நஷ்டம்!.. கணக்கு காட்டிய தயாரிப்பாளர்!.. நழுவிய அஜித்!...
விடாமுயற்சி திரைப்படத்திற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் குட் பேட் அக்லி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. விடாமுயற்சி படம் ரசிகர்களை கவராத நிலையில் குட் பேட் அக்லி அஜித் ரசிகர்களுக்கு ஏற்ற படமாக வெளிவந்தது. இப்படம் அஜித் ரசிகர்களை முழுமையாக திருப்திப் படுத்தியது. அதற்கு காரணம் அஜித் ரசிகர்கள் அஜித்திடம் என்னவெல்லாம் எதிர்பார்ப்பார்களோ, அவரை எப்படி எல்லாம் பார்க்க வேண்டும் என ஆசைப்படுவார்களோ அது எல்லாவற்றையும் ஆதிக்க ரவிச்சந்திரன் திரைக்கதையில் வைத்திருந்தார்.
பில்டப், மாஸ், அதிரடி ஆக்சன், பன்ச் வசனங்கள் என படம் பரபரப்பாக சென்றது. அதேநேரம் இப்படம் தியேட்டர் அதிபர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் லாபத்தை கொடுத்தாலும் தயாரிப்பாளருக்கு 70 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக அப்போதே செய்திகள் வெளியானது.அதுபோக, இந்த படத்தில் தனது பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு காரணமாக இப்படம் ஓடிடியிலிருந்து தூக்கப்பட்டது. இதனாலும் தயாரிப்பாளருக்கு 50 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது. மொத்தமாக கிட்டத்தட்ட 150 கோடி வரை தயாரிப்பாளருக்கு நஷ்டம்.
எனவேதான் அஜித்தை வைத்து மீண்டும் ஆதிக் இயக்கும் படத்தை தயாரிக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் முன்வரவில்லை. ஏனெனில் இதற்கு அஜித் கேட்ட சம்பளம் 180 கோடி. எனவேதான் ரோமியோ பிக்சர்ஸ் ராகுலிடம் இப்படம் போனது. வருகிற் நவம்பர் மாதம் இப்படத்தின் ஷூட்டிங் துவங்கவிருக்கிறது. அதேநேரம், அஜித்தின் சம்பள விவகாரம் தொடர்பாக இன்னமும் ராகுல் அஜித்திடம் பேசியும் வருகிறார்.
ஒருபக்கம், சமீபத்தில் குட் பேட் அக்லி தயாரிப்பாளர் வெளிநாட்டில் கார் ரேஸ் நடக்கும் இடத்திற்கே சென்று அஜித்தை சந்தித்து பேசியிருக்கிறார். குட் பேட் அக்லி படத்தால் எங்களுக்கு இவ்வளவு நஷ்டம் என விவரமாக கணக்கு காட்டி இருக்கிறார். அதோடு ‘எங்களுக்கு நீங்கள் இன்னொரு படம் நடித்து கொடுத்தால் மட்டுமே நாங்கள் நஷ்டத்தில் இருந்து மீள முடியும்’ என சொல்ல இன்னொரு படம் நடித்தால் நஷ்டத்தை சொல்லி கண்டிப்பாக தனது சம்பளத்தை குறைத்து விடுவார்கள் என யோசித்து அஜித் ‘பார்க்கலாம்’ என சொல்லி நைசாக நழுவி விட்டாராம்.
திரையுலகில் ஒரு திரைப்படம் தோல்வியடைந்து தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டால் அந்த படத்தில் நடித்த நடிகர் அந்த தயாரிப்பாளர் இருக்கும் திசை பக்கமே போக மாட்டார். அந்த தயாரிப்பாளர் மீண்டும் தன்னை பார்க்க விரும்பினால் கூட அவரை சந்திக்க விரும்ப மாட்டார். போனில் கூட பேசமாட்டார்கள். ஏனெனில் படம் நஷ்டம் என சொல்லி மீண்டும் கால்ஷூட் கேட்பார்கள். அப்படியே ஒப்புக்கொண்டு நடித்தாலும் முந்தைய படத்தின் நஷ்டத்தை சொல்லி சம்பளத்தில் கை வைத்து விடுவார்கள். எனவே 90 சதவீத நடிகர்கள் அதை தவிர்த்து விடுவார்கள். அஜித்தும் இப்போது இதைத்தான் செய்திருக்கிறார். ஆனால் எதிர்காலத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு அஜித் மீண்டும் கால்ஷீட் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
