Ajith: விருது வழங்கும் விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்ட அஜித்.. ஹாலிவுட் ரேஞ்சுக்கு கலக்குறாரே
தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தனி ஆளாக இந்த திரையுலகில் நுழைந்து கடுமையான சவால்களை சந்தித்து தன்னுடைய உழைப்பாலும் முயற்சியாலும் இன்று இந்த ஒரு பெரிய இடத்தை அடைந்திருக்கிறார். சினிமா அவருடைய தொழிலாக இருந்தாலும் அவருடைய ஒரே பேஷன் மோட்டார் ஸ்போர்ட்ஸில் மட்டும்தான். கார் ரேஸ் பைக் ரேஸ் என தன்னுடைய பேஷனை நோக்கி ஆரம்பத்தில் இருந்தே பயணித்துக் கொண்டிருந்தார்.
ஆரம்ப காலங்களில் போதிய வருமானம் இல்லாததால் அவரால் ரேசில் தொடர்ந்து கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் இப்போது பல கோடிகளை சம்பாதித்து வரும் அஜித் அதிலிருந்து தன்னுடைய இலக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறார். ஆம் தனியாக அஜித்குமார் கார் ரேஸ் என்ற ஒரு அணியை உருவாக்கி பந்தயத்தில் தன்னுடைய அணியுடன் அவர் கலந்துகொண்டு வருகிறார். துபாயில் நடந்த கார் பந்தயத்தில் அவருடைய அணி மூன்றாம் இடத்தை பிடித்து இந்தியாவுக்கு பெருமையை சேர்த்தது.
அதிலிருந்து இந்திய அளவில் மோட்டார் ஸ்போர்ட்ஸை முன்னிலை படுத்தி வருகிறார் அஜித். இப்போது உலக அளவில் நடைபெறும் கார் பந்தயத்திலும் தன்னுடைய அணியுடன் கலந்து கொண்டு வருகிறார். தொடர்ந்து சாதனைகளை படைத்து வரும் அஜித் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தை எதிர்பார்த்து அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே ஆதிக் அஜித் இணைந்த குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் சாதனை படைத்தது.
இப்படி சினிமாவிலும் கார் பந்தயத்திலும் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வரும் அஜித்துக்கு 2025 ஆம் ஆண்டுக்கான ஜென்டில்மேன் டிரைவர் விருதை வழங்கி கௌரவித்திருக்கிறார்கள். இது ஆண்களின் ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வையும் நிதியையும் திரட்டுவதற்காக கிளாசிக் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான உலகளாவிய நிகழ்வாகும். இறுதியாக ரேஸ் ஆப் ஜென்டில்மேன் ஜெர்சியில் உள்ள வைல்ட்வுட்சில் நடத்தியது. இப்போது இத்தாலியில் அமைந்துள்ள வெனிசில் இந்த விழா நடைபெற்று இருக்கிறது.

இதில் அஜித்துக்கு 2025 ஆம் ஆண்டுக்கான ஜென்டில்மேன் டிரைவர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதில் அஜித் தன்னுடைய குடும்பத்துடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் அஜித் குமாரின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அந்த புகைப்படங்களை பகிர்ந்து என்னுடைய கணவரின் அருகில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன் என்ற பதிவிட்டு இருக்கிறார்.
