அப்பாவை தொடர்ந்து அஜித்தின் அம்மாவும் மரணம்.. அஜித் குமாருக்கு அடுத்தடுத்து மிகப்பெரிய இழப்பு

 
ajithkumar

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார் அவர்களின் தாய் மோகினி இன்று உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு 85 வயதான நிலையில், வயது மூப்புக் காரணமாக உயிரிழந்தார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது மறைவு அஜித் குடும்பத்தினரை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிறுவயதிலிருந்தே மகனின் கனவுகளுக்கு துணையாக இருந்தவர்கள் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் மற்றும் தாய் மோகினி. அவர்களது ஊக்கமும் அரவணைப்பும் தான் அஜித்துக்குள் எந்த சூழலையும் எதிர்கொள்ளும் துணிவை உருவாக்கிக் கொடுத்தது.

தனது வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்த பிறகும், பெற்றோரின் நலனில் அக்கறை செலுத்திய அஜித், திருமணத்திற்குப் பிறகும் கட்டிய வீட்டிலேயே தனது பெற்றோருக்கும், மனைவி ஷாலினியின் பெற்றோருக்கும் தனித்தனி அறையை ஒதுக்கி, கூட்டு குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்து வந்தார். 

சில ஆண்டுகளுக்கு முன்பு அஜித்தின் தந்தை சுப்ரமணியம் வயது முதிர்வு காரணமாக காலமானார். அப்போது தனது தந்தையின் மறைவு குறித்து அஜித் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அனுதாபம் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

கணவரை இழந்த பிறகு தாய் மோகினியை அஜித் மிகுந்த அன்புடனும் கவனத்துடனும் பார்த்துக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. குடும்பத்தினரின் அரவணைப்பில் இருந்து வந்த மோகினி, அண்மைக்காலமாக வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்த செய்தி வெளியாகியுள்ள நிலையில், அஜித் குடும்பத்தினர் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர். அவரது இறுதிச்சடங்குகள் பாலவாக்கத்தில் உள்ள அஜித்தின் இல்லத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாயை இழந்துள்ள அஜித்துக்கு ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags

From Around the web