விஜய்க்கு எதிரா சிண்டு முடியாதீங்க!.. ப்ளீஸ் ஸ்டாப்!.. தளபதிக்கு தோள் கொடுக்கும் தல!...
நடிகர் விஜயும் அஜித்தும் சினிமாவில் ஒன்றாகவே வளர்ந்தவர்கள். அதேநேரம் அஜித்துக்கு விஜய் சீனியர். இருவருமே துவக்கத்தில் காதல் படங்களை நடித்து பின்னர் ஆக்சன் ஹீரோவாக மாறி ஒரு கட்டத்தில் இருவரும் மாஸ் நடிகர்களாக மாறினார்கள். விஜய், அஜித் இருவருக்குமே அதிக ரசிகர் கூட்டம் இருக்கிறது. ரஜினி - கமல் ரசிகர்களிடையே எப்படி மோதல் இருந்ததோ அதேபோல் விஜய் - அஜித் ரசிகர்களுக்கு இடையே மோதல் உருவானது.
டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் கடந்த பல வருடங்களாகவே விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் தொடர்ந்து சண்டை போட்டு வருகிறார்கள். ஒருவரை பெருமையாக பேசுவதற்காக ஒருவரை அசிங்கப்படுத்தி பேசாதீர்கள் என அஜித் அறிக்கை விட்டும் யாரும் கேட்கவில்லை. சினிமாவில்தான் போட்டி என்றாலும் அஜித்தும் விஜயும் நல்ல நட்புடனே பழகி வருகிறார்கள். அஜித் என்னென்ன படங்களில் நடிக்கிறார்? யார் இயக்கத்தில் நடிக்கிறார் என்பதை விஜய் கவனிப்பது போலவே விஜய் என்னென்ன செய்கிறார் என்பதை அஜித்தும் கவனித்து வருகிறார். அவ்வப்போது அவர்கள் தொலைபேசியில் பேசிக் கொள்வதும் உண்டு. அஜித்தின் தந்தை மரணமடைந்தபோது விஜய் நேரில் சென்று ஆறுதல் சொன்னார்.

இந்நிலையில்தான் சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றில் பேசிய அஜித் கரூர் சம்பவம் குறித்து பேசியபோது ‘ கரூர் சம்பவத்திற்கு ஒரு தனி நபரை மட்டுமே (விஜய்) நாம் குறை சொல்ல முடியாது. நாம் எல்லோருமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும். நடிகர்கள் மீது அன்பு செலுத்தலாம். ஆனால் உயிரை கொடுக்கும் அளவுவுக்கு அன்பு செலுத்த தேவையில்லை. 120 கோடி மக்கள் இருக்கும் நாட்டில் கூட்டம் கூட்டுவதை எல்லோரும் பெருமையாக நினைக்கக் கூடாது. இது மாற வேண்டும்’ என பேசி இருந்தார்.
இதில் அஜித் கடைசியாக சொன்னதை மட்டுமே எடுத்துக் கொண்டு விஜய்க்கு உரைக்கும்படி அஜித் பேசியிருக்கிறார். கரூர் சம்பவத்திற்கு திமுகதான் காரணம் என விஜய் சொன்னார். ‘என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்’ என முதலவர் ஸ்டாலினை பார்த்து சொன்னார். ஆனால் அந்த சம்பவத்திற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத அஜித்தோ ‘இதற்கு நான் உட்பட எல்லோருமே பொறுப்பு’ என பங்கெடுத்து கொள்கிறார். அந்த பக்குவம் விஜயிடம் இல்லை’ என விஜயை பிடிக்காதவர்கள் சமூகவலைத்தளங்களில் விஜய்க்கு எதிராக பேசினார்கள்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய அஜித் ‘நான் ஏதோ விஜய்க்கு எதிராக பேசியது போல பல ஊடகங்கள் சித்தரிக்கிறார்கள். அவருக்கு நல்லது நடக்குவேண்டும் என்றே நான் ஆசைப்படுகிறேன். என்னுடைய பேட்டியை விஜய்க்கு எதிராக சித்தரிப்பவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். ப்ளீஸ் ஸ்டாப்’ என பதிலடி கொடுத்திருக்கிறார் அஜித்.
