AK64: சம்பளம் கொடுக்க முடியாது.. புலம்பிய தயாரிப்பாளர்!.. அஜித் கொடுத்த ஆஃபர்!..
குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார் என்பது ஏற்கனவே வெளியான செய்திதான். அதேநேரம் இந்த படத்திற்கு யார் தயாரிப்பாளர் என்பதில் நிறைய குழப்பங்கள் இருந்தது. அதற்கு காரணம் அஜித் கேட்ட 180 கோடி சம்பளம். இதுவரை அஜித்திற்கு எந்த தயாரிப்பாளரும் இவ்வளவு சம்பளம் கொடுக்கவில்லை.
அஜித் எப்போதுமே விஜயோடு ஒப்பிட்டுதான் தன்னுடைய சம்பளத்தை நிர்ணயிப்பார். ஜனநாயகனுக்கு விஜய் 225 முதல் 250 கோடி வரை சம்பளம் வாங்கி இருக்கலாம் என கணிக்கப்படும் நிலையில்தான் அஜித் இந்த படத்திற்கு 180 கோடி கேட்டதாக சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் விடாமுயற்சி பட சமயத்தில்தான் அஜித்தின் சம்பளம் 100 கோடியை தாண்டியது. அதன்பின் குட் பேட் அக்லி என்கிற ஒரு படத்தில் மட்டுமே அஜித் நடித்தார். அஜித் இவ்வளவு சம்பளம் கேட்டதால்தான் சன் பிக்சர்ஸ், ஏஜிஎஸ் போன்ற பல கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட அஜித்துக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது என பின் வாங்கியது.
ஒரு வழியாக சின்ன சின்ன படங்களை தயாரித்து வந்த தயாரிப்பாளரும், பிரபல சினிமா விநியோகஸ்தருமான ரோமியோ பிக்சர்ஸ் ராகுலை இந்த பிராஜெக்ட்டுக்குள் கொண்டு வந்தார்கள். அஜித்தை வைத்து படம் எடுத்தால் நாமும் பெரிய தயாரிப்பாளர் ஆகிவிடலாம் என்கிற ஆசையில் ராகுலும் இதற்கு ஒப்புக்கொண்டார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. இந்நிலையில் ‘நீங்கள் கேட்கும் சம்பளத்தை என்னால் கொடுக்க முடியாது. ஏதாவது பார்த்து செய்யுங்கள்’ என அஜித்திடம் ராகுல் கேட்டதால் ‘எனக்கு அட்வான்ஸாக சில கோடிகளை கொடுங்கள். பொதுவாக நான் மாதம் இவ்வளவு கோடி என வாங்குவேன். அப்படி கொடுக்க வேண்டாம். படம் முடிந்து வியாபாரமான பின் எனது மீதி சம்பளத்தை கொடுங்கள். என்னால் இந்த சலுகை மட்டுமே கொடுக்க முடியும்’ அவரிடம் அஜித் சொல்லிவிட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது.
ஒருபக்கம் இந்த படத்தை தயாரிக்க ராகுலுக்கு பைனான்சியர் கிடைக்கவில்லை. விடாமுயற்சி, குட் பேட் அக்லி இரண்டு படங்களுமே தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்பதால் இந்த படத்திற்கு பைனான்ஸ் கொடுக்க யாரும் முன் வரவில்லை என ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் ‘இந்த படத்திற்கு என்ன பட்ஜெட் தேவையோ அதை நான் ரெடி பண்ணி வைத்து விட்டேன். யார் யாரிடம் கேட்டிருக்கிறேனோ அவர்கள் எல்லாம் கொடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள். அதனால் பணத்திற்கு பிரச்சனை இல்லை’ என்று ராகுல் தனது நட்பு வட்டாரங்களிடம் சொல்லி வருவதாகவும் ஒரு செய்தி ஓடுகிறது. இதில் எது உண்மை என்பது அடுத்த மாதம் தெரிந்து விடும்.
