பருத்தி வீரனோட என்னை நிறுத்தீட்டீங்க!.. ரஜினி அப்பவே சொன்னாரு!... உடைந்து பேசிய அமீர்!...

Ameer: இயக்குனர் பாலாவின் சேது, நந்தா ஆகிய படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்தவர் அமீர். இவர் பாலாவின் நண்பரும் கூட. நந்தா படத்தில் எப்படி நடிப்பது என சூர்யாவுக்கு முழுக்க முழுக்க சொல்லிக் கொடுத்தது அமீர்தான். அந்த படத்திற்கு பின் சூர்யாவை வைத்து ‘மௌனம் பேசியதே’ என்கிற படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக களமிறங்கினார். ஜீவாவை வைத்து ராம் இயக்கினார். அப்படம் பேசப்பட்டது. அதன்பின் 2007ம் வருடம் அவர் இயக்கி வெளியான பருத்திவீரன் இப்போது வரை அவரின் திரை வாழ்வில் ஒரு மகுடமாக இருக்கிறது.
சூர்யாவின் தம்பி கார்த்தி அறிமுகமான இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய படமாக பார்க்கப்படுகிறது. மற்ற மொழிகளில் இருக்கும் முக்கிய இயக்குனர்களுக்கும் பிடித்த படமாக பருத்திவீரன் இருக்கிறது. இந்த படம் ரசிகர்களால் மட்டுமல்லாமல் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது.
இந்த படத்தில் நடித்த பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது. அதேநேரம் இந்த படத்திற்கு பின் அமீர் இயக்கிய ஆதி பகவான் திரைப்படம் நன்றாக இருந்தாலும் ஏனோ ரசிகர்களை கவரவில்லை. அதன்பின் கடந்த 12 வருடங்களாக அமீர் எந்த படத்தையும் இயக்கவில்லை. சில படங்களை இயக்க முயற்சிகள் செய்து அது தோல்வியில் முடிந்தது. படம் இயக்கவில்லை என்றாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் அமீர். யோகி என்கிற படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன் பின் வடசென்னை, மாறன், உயிர் தமிழுக்கு போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார் அமீர்.
இந்நிலையில் ஒரு பட விழாவில் பேசிய அமீர் ‘என்னை அடையாளப்படுத்தும் போது பருத்திவீரன் படம் எடுத்தவர் என்றேஎல்லோரும் சொல்கிறார்கள். எந்த விழாவுக்கு போனாலும் என்னை அப்படித்தான் அழைக்கிறார்கள். இனிமேல் என்னை அப்படி கூப்பிடாதீர்கள். ஏனெனில் நான் பருத்திவீரனோடு நின்றுவிடக்கூடாது என நினைக்கிறேன். அதை தாண்டி நான் செல்ல வேண்டும். அந்த படம் ஒரு தலைமுறையை கடந்து விட்டது. அதை பற்றி பேசுவதை நிறுத்தி விடலாம். நான் அதை விரும்பவில்லை என்றாலும் இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.
பொதுவாக கமல் சார் தமிழ் சினிமாவின் உள்ளே வெளியே என்று எல்லாவற்றையும் தெரிந்தவர். ஆனால் ரஜினி சார் ஒரு கமர்சியல் நடிகர் என்று மட்டும்தான் எல்லோரும் நினைக்கிறோம். ஆனால் அதில் உண்மை இல்லை. பருத்திவீரன் படம் பார்த்து விட்டு என்னிடம் போனில் பேசிய ரஜினி சார் ‘அமீர் இது படம் இல்லை.. பாடம்’ என்று சொன்னார். நான் சாதாரணமாக ‘சரி சார்.. நன்றி சார்’ என சொன்னேன். நான் மிகவும் குறைவாக ரியாக்ட் செய்ததால் நாம் சொன்னது இவனுக்கு புரியவில்லை என்பது அவருக்கு புரிந்து விட்டது.
எனவே ‘நான் சீரியஸாக சொல்கிறேன் அமீர்’ என அதை திருப்பித் திருப்பி சொன்னார். மேலும் ‘அமீர் நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். நீங்கள் சினிமாவை விட்டாலும் சினிமா உங்களை விடாது’ என்று சொன்னார். உண்மையில் அதுதான் என் திரை வாழ்வில் நடந்திருக்கிறது. நான் கடந்த சில வருடங்களில் சில படங்களை இயக்க முயற்சி செய்த நடக்காமல் போயிருக்கிறது. ஆனாலும் நான் சினிமாவில்தான் இன்னும் இருக்கிறேன். படங்களின் நடிக்கிறேன். மறுபடி படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இப்போதுதான் ரஜினி சார் சொன்னதை நான் பொருத்திப் பார்க்கிறேன். சினிமாவை எவ்வளவு நேசித்தால், எவ்வளவு புரிந்து கொண்டால் அப்படி சொல்ல முடியும்’ என ஃபீலிங்கோடு பேசினார் அமீர்.