25 ஆயிரம் கோடிக்கு அதிபதியானாலும் பழசை மறக்காத அனிருத்!.. நெகிழ்ச்சி போஸ்ட்!..
அனிருத் ரவிச்சந்தர் தனது இசை, பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தற்போது இசையமைப்பாளராக தனது 15 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் தனது முதல் பாடல் உலகிற்கு அறிமுகமானது இந்த இசைப் பயணம் தொடர்ந்து தடையின்றி நடைபெற்று வருவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளில் இசையமைத்ததுடன், சர்வதேச கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது, இசை ஆல்பங்கள், ரசிகர்கள் விரும்பிக் கேட்கும் பாடல்கள் என இந்த 15 ஆண்டுகளில் பல மறக்க முடியாத அனுபவங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தனது பாடல்கள் பல பில்லியன் கணக்கான முறை கேட்கப்பட்டதும், உலகம் முழுவதும் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் அரங்கம் நிறைந்த ரசிகர்கள் பங்கேற்றதும் மறக்க முடியாத தருணங்கள் குறிப்பாக, இசை நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் தனது பாடல்களைத் தன்னுடன் இணைந்து பாடுவதும் மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிப்பதாகக் கூறியுள்ளார்.
2026ஆம் ஆண்டு வெளியான மற்றும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK), ஜனநாயகன், டி.சி., பாரடைஸ் மற்றும் ஜெயிலர் 2 உள்ளிட்ட திரைப்படங்களுடன் இந்த 15 ஆண்டுகளைக் கொண்டாடுவது கூடுதல் மகிழ்ச்சியை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அல்புகெர்க் ரெக்கார்ட்ஸ் (Albuquerque Records) என்ற புதிய இசை நிறுவனத்தையும் தொடங்கியுள்ளதாக அனிருத் தெரிவித்துள்ளார். தனக்கு இத்தனை ஆண்டுகளாக ஆதரவளித்த இசைத்துறைக்குத் திருப்பிக் கொடுக்கும் வகையிலும், அடுத்த தலைமுறை இசைக் கலைஞர்கள் மற்றும் திறமையாளர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்திலும் இந்தப் புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும், கடந்த 15 ஆண்டுகளாக ஒரு நாள் கூட ஓய்வெடுக்காமல் இசைப் பணியைத் தொடர்ந்து வருவதாகவும், இசை மீதான அதே காதலுடன் இனியும் பயணிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 15 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், இன்னும் பல கனவுகளையும் இசைப் பயணங்களையும் தொடர இருப்பதாகக் கூறி, 'இதுதான் தொடக்கம்' என்ற நம்பிக்கையுடன் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.
