கிராமங்களின் அன்பையும் துடிப்பையும் காட்டியவர்.. பாரதிராஜா மறைவு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்
பாரதிராஜா மறைவுக்கு இசைஞானி இளையராஜா காலையிலேயே நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் எங்கே காணோம் என நினைத்த ரசிகர்களுக்கு தற்போது எக்ஸ் பக்கத்தில் பதிவு மூலம் இளையராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பாரதிராஜாவும் ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்து பணியாற்றிய படங்கள் இசை மற்றும் கதை சொல்லல் ஆகிய இரண்டிலும் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக கிழக்கு சீமையிலே திரைப்படம் இந்த கூட்டணியின் முதல் முக்கிய வெற்றியாக அமைந்தது. “மானூத்து மந்தையிலே”, “ஆத்தங்கர மரமே” உள்ளிட்ட பாடல்கள் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
அதனைத் தொடர்ந்து கருத்தம்மா திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற “போராளே பொன்னுத்தாயி” உள்ளிட்ட பாடல்கள் தேசிய அளவில் பாராட்டுகளைப் பெற்றன.
பின்னர் பசும்பொன் மற்றும் அந்திமந்தாரை போன்ற படங்களிலும் இந்த கூட்டணி இணைந்து பணியாற்றியது. கிராமிய உணர்வுகளையும் நவீன இசையையும் இணைத்த இந்த படங்களின் பாடல்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளன.
மேலும், தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட பதிவில், “தமிழ் கிராமங்களின் அன்பையும் துடிப்பையும் உங்களைப் போல வேறு யாரும் திரையில் படம்பிடித்துக் காட்டியதில்லை. உங்கள் படைப்புகள் காலங்கடந்து பல தலைமுறையினரைத் தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கின்றன. தென்னிந்தியாவின் மிகத் தொலைதூர கிராமங்களுக்கு எனது இசையைக் கொண்டு சேர்த்ததற்கும், அங்குள்ள மக்களின் வாழ்வியல் கதைகளை உலகுக்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி. பாரதிராஜா சார், அமைதியில் துயில்கொள்ளுங்கள்” என குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இன்று பாரதிராஜா உடலால் நம்மை விட்டு பிரிந்திருந்தாலும், அவர் உருவாக்கிய படைப்புகளும், அவற்றில் ஒலித்த இசைகளும் தலைமுறைகளைத் தாண்டி தொடர்ந்து வாழும் என்பது ரசிகர்களின் உணர்வாக உள்ளது. ஏ.ஆர். ரஹ்மானின் இந்த இரங்கல் பதிவு, பாரதிராஜா தமிழ் சினிமாவுக்கு ஏற்படுத்திய தாக்கத்தை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியுள்ளது.
