1. Home
  2. Latest News

AVM Saravanan: நடிப்பு பல்கலைகழகமாக இருந்த ‘ஏவிஎம்’ நிறுவனம்..75 ஆண்டுகளில் 175 படங்கள்

saravanan
அவருடைய பணிவு இன்று வரை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.


ஏவிஎம் நிறுவனம் ஒரு சகாப்தம்:

தமிழ் சினிமாவிற்கு பல தரமான படங்களை கொடுத்ததில் மிக முக்கிய பங்கு வகித்த நிறுவனம் ஏவிஎம். ஏவிஎம் மெய்யப்ப செட்டியாருக்கு அடுத்து அவருடைய மகன் ஏ வி எம் சரவணன் அந்த நிறுவனத்தை நடத்தி வந்தார். எம்ஜிஆர் முதல் தற்போது உள்ள சூர்யா வரை அனைத்து நடிகர்களை வைத்தும் பல தரமான படங்களை கொடுத்தவர் ஏவிஎம் சரவணன்.

இன்று அவர் இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்கு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர், சிவக்குமார், சூர்யா ,ரஜினி, வைரமுத்து, பார்த்திபன், விஷால் என அடுத்தடுத்து பிரபலங்கள் ஏவிஎம் சரவணனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதில் ரஜினி ஏவிஎம் சரவணன் உடலை பார்த்து சற்று நேரம் கண்கலங்கி நின்று போனார்.ஏவிஎம் சரவணனுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு ரஜினி பேசும் போது அவருடைய நினைவலைகளை பகிர்ந்தார். அதாவது, 

எளிமைக்கு பேர் போனவர்:

மிகப்பெரிய மனிதர். ஜெண்டில்மேன் என்று சொன்னால் அதற்கு எடுத்துக்காட்டு ஏவிஎம் சரவணன் தான். எப்பொழுதுமே வெள்ளை நிற வேட்டி சட்டைதான் அணிவார். அதைப் போல அவரது உள்ளமும் வெள்ளையாகத்தான் இருக்கும். சினிமாவை தன் உயிராக நினைத்தவர். என் மீது பேரன்பு கொண்டவர். என்னுடைய நலன் விரும்பியும் கூட. என்னுடைய கஷ்டகாலங்களில் துணை நின்றவர் ஏவிஎம் சரவணன் என்று ரஜினி கூறினார். 

rajini

அதுமட்டுமில்லாமல் ஏவிஎம் தயாரிப்பில் ஒன்பது படம் நடித்திருக்கிறார் ரஜினி. அந்த ஒன்பது படங்களுமே பெரிய ஹிட். அதற்கு முக்கிய காரணமே ஏவிஎம் சரவணன் தான். 80களில் முரட்டுக்காளை, அதனை அடுத்து சிவாஜி, சிவாஜிக்கு பிறகு இன்னும் பிரம்மாண்டமான படத்தை ரஜினியை வைத்து எடுக்க வேண்டும் என நினைத்திருக்கிறார். ஆனால் அது நடக்கவே இல்லை. 

சாம்ராஜ்யமாக திகழ்ந்த நிறுவனம்:

எம்ஜிஆர், ரஜினி, கமல் ,விஜய் ,அஜித் ,சூர்யா என இவர்களின் வாழ்க்கையை மாற்றிக் காட்டிய ஒரு பெரிய சாம்ராஜ்யமாக இருந்தது ஏவிஎம் நிறுவனம். தயாரிப்பாளர் உலகத்தில் அசைக்க முடியாத சாம்ராஜ்யமாக இருந்தது இந்த நிறுவனம் .வரலாற்றில் நிலைத்து நிற்கக்கூடிய பல படங்களை தனது நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார் ஏவிஎம் சரவணன். தனக்கென ஒரு பெரிய சாம்ராஜ்யம் இருந்தாலும் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் வெளியில் வரும் பொழுது கைகளை கட்டிக்கொண்டு மிகவும் எளிமையாகவும் பணிவாகவுமே வருவார் ஏவிஎம் சரவணன். இவருடைய எளிமைக்காகவே அனைவருக்கும் இவரை மிகவும் பிடித்து போனது. தயாரிப்பிற்காக பல விருதுகளை வென்றிருக்கிறார்.

கருப்பு வெள்ளை காலம் முதல் தற்போது உள்ள டிஜிட்டல் தொழில்நுட்பம் வரை கிட்டத்தட்ட 75 ஆண்டுகளில் 175 படங்களை தயாரித்து மிகப்பெரிய சாதனை படைத்த நிறுவனமாக மாறி இருக்கிறது ஏவிஎம் நிறுவனம். எடுத்த உடனேயே வெற்றி வாகை சூட வில்லை. பல கரடு முரடான பாதைகளை சந்தித்துதான் இந்த நிறுவனம் வந்திருக்கிறது. ஏவிஎம் சரவணனின் தந்தை ஏவி மையப்ப செட்டியார் நியூ லேட்டஸ்ட் ஸ்டுடியோ மூலம் அல்லி அர்ஜுனா என்ற படத்தை 1934 ஆம் ஆண்டு தயாரித்தார். அதனை அடுத்து ரத்னாவளிஎன்ற படத்தையும் நந்தகுமார் என்ற படத்தையும் தயாரித்தார். அவர் தயாரித்த முதல் மூன்று படங்களுமே பெரும் தோல்வியை சந்தித்தன.

வெள்ளிவிழா கொண்டாடிய படம்:

தோல்விக்கான காரணங்களை ஏவி மையப்ப செட்டியார் உற்று நோக்கினார். நம்மிடம் ஸ்டூடியோ இல்லாததால் நம்முடைய விருப்பப்படி படம் எடுக்க முடியவில்லை. நாமே ஒரு ஸ்டூடியோ ஆரம்பித்து படமெடுத்தால் என்ன என்ற முடிவுக்கு அப்பொழுதுதான் வந்திருக்கிறார் ஏவி மையப்ப செட்டியார். அதற்கு நிறைய செலவு ஆகும் என்பதால் வேறு சிலரையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு அடையாரில் 1940 ஆம் ஆண்டு பிரகதி என்ற பெயரில் ஸ்டூடியோவை ஆரம்பித்தார். இந்த நிறுவனத்தின் மூலம் வசந்த சேனா, வாயாடி ,போலி பாஞ்சாலி, என் மனைவி ஆகிய படங்களை தயாரித்தார்.

இப்படி தொடர்ந்து அந்த ஸ்டூடியோ மூலம் பல படங்களை தயாரித்து வந்தார். 1945 ஆம் ஆண்டு ஸ்ரீ வள்ளி என்ற படத்தை தயாரிக்க அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு பிறகு தான் 1945 ஆம் ஆண்டு ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் நிறுவனத்தை சென்னையில் ஆரம்பித்தார். 1949 ஆம் ஆண்டு வாழ்க்கை என்ற படத்தை தயாரித்தார். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு வெள்ளி விழா கொண்டாடிய படமாகவும் மாறியது. ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாகவே ஏவிஎம் நிறுவனம் மாறியது. சிவாஜி, கமல்ஹாசன், சிவக்குமார், குமாரி ருக்மணி, விஜயகுமாரி., குட்டி பத்மினி, டி ஆர் மகாலிங்கம் போன்ற மாபெரும் நடிகர்கள் இங்கிருந்து உருவானவர்கள் தான் .

ஏவிஎம் சரவணனின் தொடர் வெற்றி:

 மையப்ப செட்டியார் மறைவிற்கு பிறகு அவருடைய மகன் ஏவிஎம் சரவணன் அந்த நிறுவனத்தை வழிநடத்தி வந்தார். தன்னுடைய அப்பாவை போலவே இவரும் கடமையை உயிராக மதித்தார். இவர் வந்த பிறகுதான் பராசக்தி, களத்தூர் கண்ணம்மா, முரட்டுக்காளை ,சர்வர் சுந்தரம் போன்ற பல வெற்றி படங்களை தயாரித்து கொடுத்தார். கடைசியாக அயன் சிவாஜி போன்ற படங்களை தயாரித்தார். பன்முகம் கொண்டவராக விளங்கிய ஏவிஎம் சரவணன் தன்னுடைய தொழிலாளர்களுடன் சேர்ந்து தொழிலாளியாகவே சில சமயங்களில் பணிபுரிவார்.

mgr

எல்லா மதமும் சம்மதம் என்பதில் குறிக்கோளாக இருந்திருக்கிறார். அரசியல் தலைவர்களாக காமராஜர், கருணாநிதி, எம்ஜிஆர், சோனியா காந்தி ,ஜெயலலிதா என பல எண்ணற்ற தலைவர்களுடன் பழகியவர். எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் யாரிடம் பேசினாலும் கையை கட்டிக்கொண்டு நிற்கும் அவருடைய பணிவு இன்று வரை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.