Categories: Cinema News latest news throwback stories

முதலில் சம்மதிக்காத ஆச்சி….சண்டைக்காட்சியில் வெளுத்துக்கட்டிய அதிசயம்..! காரை இரண்டாகப் பிரிய வைத்தது இவரா..?

1988ல் ராஜசேகர் இயக்கத்தில் பாண்டியராஜன், ஊர்வசி, மனோரமா உள்பட பலர் நடித்த செம மாஸான படம் பாட்டி சொல்லைத் தட்டாதே. இந்தப் படம் உருவான விதம் குறித்து தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

நான் தயாரிப்பு நிர்வாகியான பின் எங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட முதல் படம் மாமியார் மெச்சிய மருமகள். 23.11.1959ல் வெளியானது. ஆனால் படம் வெற்றி பெறவில்லை.

எனக்கு வருத்தம் தான். ஆனால் இந்தத் தோல்வியை ஈடுகட்ட பின்னாளில் இதே போன்ற சப்ஜெக்டை எடுத்து மாபெரும் வெற்றிப்படத்தை எடுக்க வேண்டும் என்று உறுதி எடுத்தேன்.

அந்த உறுதியை நிறைவேற்றிய படம் தான் பாட்டி சொல்லைத் தட்டாதே. ஒருமுறை கங்கை அமரன் எங்களுக்குப் படம் செய்து தர வேண்டும் என்று விரும்பிக் கேட்டார்.

மாமியார் மெச்சிய மருமகள் பட தோல்வியை ஈடுகட்டும் வகையில் படம் எடுக்க வேண்டும் என எனது விருப்பத்தைச் சொன்னேன். அதற்கு கங்கை அமரன் இயக்குவதாகவும், இளையராஜா இசை அமைப்பதாகவும் திட்டம் இருந்தது. ஆனால் அது சரிவரவில்லை.

PST

சித்ராலயா கோபு பட்டம் பறக்குது என்ற நாடகத்தை சென்னை தொலைக்காட்சிக்கு எழுதிக் கொடுத்து அது நிராகரிக்கப்பட்டு இருந்தது. அந்தக் கதை தான் பாட்டி சொல்லைத் தட்டாதே. மாமியார் மருமகள் உறவை வைத்து எடுத்தது போல இந்தப் படத்தில் மாமியார் பேரன் சென்டிமென்ட் நல்லா ஒர்க் அவுட் ஆனது.

என் பாட்டி – அம்மாவின் அம்மா. எனக்கு ரொம்பச் செல்லம். நான் அவருக்கு அதற்கு மேல் செல்லம். பாட்டிக்கு பேரனிடம் அன்பு அதிகமாக இருக்கும். பாட்டி சொல்லைத் தட்டாதே படத்திலும் பாட்டிக்கு பேரன் மீது பாசம் அதிகமாக இருக்கும்.

இந்தப்படத்தில் ஒரு வினோதமான காரைப் பயன்படுத்தினோம். ஓடிக்கொண்டு இருக்கும் போதே இரண்டாகப் பிரிந்து இரண்டும் தனித்தனியே இயங்குவது மாதிரி அமைத்தோம். இந்தத் தொழில்நுட்பம் முழுவதும் என் மகன் குகனுடையது.

வோக்ஸ் வேகன் கார் ஒன்றை வாங்கி அதை நடுவில் இரண்டாகப் பிரித்து குகன் உருவாக்கினார். அப்படியே விட்டு விட்டு முன்பக்கம் ஓர் ஆட்டோ ரிக்ஷா என்ஜினை வைத்து அட்டகாசமாக அந்தக் கார் உருவானது. அந்தக் காருக்குப் பெயர் சூப்பர் கார்.

PST2

படத்தில் மனோரமா சண்டை போடுவதாக ஒரு காட்சி வைத்தோம். அதில் நடிக்க அவர் எளிதில் சம்மதிக்கவில்லை. சண்டைக் காட்சி வேண்டாம் ஆச்சி. எங்கள் துறையிலேயே பலர் பலவிதமாக மனோரமாவை டிஸ்கரேஜ் செய்து வந்தனர். அது தான் அவர் தயக்கத்திற்குக் காரணம்.

ஆச்சியே என்னிடம் வந்து தம்பி நான் ஃபைட் பண்ணா நல்லாருக்குமா என்று கேட்டார். உங்களால் பண்ண முடியும் அல்லவா என்று கேட்டேன். ஏன்…பண்ணாம? நான் பண்ணுவேன் என்றார் நம்பிக்கையுடன். அப்புறம் என்ன? நீங்க ஃபைட் பண்றீங்க என்றேன்.

மனோரமா சண்டைக்காட்சியில் வெளுத்துக் கட்டினார். காரும், ஆச்சியின் அட்டகாசமான ஃபைட் சீன்களும் அனைவரையும் கவர்ந்தன.

கார் இரண்டாகப் பிளக்கும் காட்சியிலிருந்தும், ஆச்சி குச்சி சுற்றும் காட்சியிலிருந்தும் 10 வினாடிகள் வருமாறு நாங்கள் தயாரித்து வெளியிட்ட டிவி விளம்பரங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்தை உண்டாக்கின. படம் மாபெரும் வெற்றி பெற்று வெள்ளிவிழாவைக் கொண்டாடியது.

விழாவில் கலைஞர் இவ்வாறு சொன்னார். நான் ஒருமுறை வெளியூர் சென்றிருந்தபோது ஓர் இடத்தில் மக்கள் கும்பலாக சூழந்து கொண்;டு இருந்தனர். அந்த இடமே பரபரப்பாக இருந்தது. வேறு கட்சியினர் நடத்தும் கூட்டமோ என்று எண்ணிக் கொண்டு எந்தக் கட்சி என்று விசாரித்தேன்.

பாட்டி சொல்லைத் தட்டாதே சூப்பர் கார் ஷோவுக்காகக் கொண்டு வரப்பட்டு அங்கே நிறுத்தப்பட்டு இருந்தது. படம் பெரிய பட்ஜெட் அல்ல. ஆனால் வெற்றி மாபெரும் வெற்றி. எனது மன உறுதியை நிறைவேற்றிய இந்தப்படம் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தது.

Published by
sankaran v