ஏவிஎம் சரவணன் காலமானார்!.. திரையுலகினர் இரங்கல்...
பாரம்பரியமிக்க சினிமா நிறுவனத்திலிருந்து வந்தவர்தான் ஏவிஎம் சரவணன். தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை காலத்தில் இருந்தே நல்ல கதை அம்சம் கொண்ட பல திரைப்படங்களை தயாரித்தது ஏவிஎம் நிறுவனம். அதை செய்தவர் ஏவிஎம் நிறுவனத்தை நிறுவிய மெய்யப்ப செட்டியார். நடிகர் திலகம் சிவாஜியை பராசக்தி படத்தில் அறிமுகம் செய்ததும் இந்த நிறுவனம்தான்.
அவரின் மூன்று மகன்களில் மூத்தவர்தான் சரவணன். மெய்யப்ப செட்டியார் ஓய்வு பெற்ற போது ஏவிஎம் நிறுவனத்தை சரவணன் நடத்தி வந்தார். இவரின் தலைமையிலும் ஏவிஎம் நிறுவனம் பல முக்கிய திரைப்படங்களை தயாரித்திருக்கிறது.
ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களை வைத்து இந்த நிறுவனம் படங்களை தயாரித்திருக்கிறது. AVM சரவணன் என்றாலே வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்து பவ்யமக அவர் கை கட்டி நிற்கும் புகைப்படம்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு மிகவும் அமைதியானவர். எல்லோரிடமும் மிகவும் பண்பாக பேசும் பழக்கம் கொண்டவர்.
இந்நிலையில்தான் இன்று அதிகாலை அவர் மரணம் அடைந்திருக்கிறார். அவரின் இறுதிச்சடங்கு ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள மூன்றாவது அரங்கில் இன்று நடைபெறவிருக்கிறது. அவருக்கு வயது 85. அவரின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
