Categories: Cinema News latest news throwback stories

“நான் என்ன அப்படிப்பட்டவனா?”… பாலச்சந்தர் சொன்ன விஷயத்தால் மனம் நொந்துப்போன கவிஞர் வாலி…

தமிழ் சினிமாவின் வாலிப கவிஞராக திகழ்ந்த கவிஞர் வாலி, நான்கு தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதிய பெருமைக்குச் சொந்தக்காரர். காலத்துக்கு ஏற்றார் போல் தன்னை அப்டேட் செய்துகொண்டவர் வாலி. ஆதலால்தான் அவரால் எம்.ஜி.ஆருக்கும் பாடல் எழுத முடிந்தது, சிவகார்த்திகேயனுக்கும் பாடல் எழுதமுடிந்தது.

Vaali

இவ்வாறு தமிழ் சினிமாவின் முன்னணி கவிஞராக திகழ்ந்த வாலியின் மனதை நோகடிக்கும் விதமாக கே.பாலச்சந்தர் அளித்த பேட்டி ஒன்றை குறித்து இப்போது பார்க்கலாம்.

கே.பாலச்சந்தர் ஒரு பத்திரிக்கை பேட்டியில் கலந்துகொண்டபோது வாலியை குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பாலச்சந்தர் “காட்சிக்கு பொருத்தமான பாடல்களை எழுதுவதை விட, பாப்புலாரிட்டியை மனதில் வைத்துக்கொண்டுத்தான் பாடல்களை எழுதுவார் வாலி” என்று கூறியுள்ளார். இந்த செய்தியை அறிந்த வாலியின் இதயம் நொறுங்கிப்போனதாம்.

K.Balachander

பாலச்சந்தரின் பல திரைப்படங்களுக்கு வாலி பாடல்கள் எழுதியுள்ளார். இவ்வளவு நெருக்கமான உறவு இருந்தும் பாலச்சந்தர் ஏன் அவ்வாறு கூறினார் என்று வாலிக்கு புரியவே இல்லையாம். பாலச்சந்தரின் இந்த கருத்தால் வாலிக்கும் அவருக்கும் இடையே பல நாட்கள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம்.

“காட்சிக்குப் பொருத்தமான பாடல்கள் எழுதவில்லை என்றால் இத்தனை ஆண்டுகளாக தமிழ் சினிமா உலகம் என்னை ஏற்றுக்கொண்டிருக்குமா? பாலச்சந்தர் எப்படி இவ்வாறு கூறலாம்?” என வாலி ஒரு பேட்டியில் பாலச்சந்தர் அவ்வாறு பேசியது குறித்து பகிர்ந்துகொண்டார்.

Vaali and K.Balachander

எனினும் இருவருக்குள்ளும் ஏற்பட்ட இந்த கருத்து மோதலால் அவர்களின் உறவுக்கு எந்த பங்கமும் விளையவில்லை. கவிஞர் வாலி முதன்முதலில் நடித்த திரைப்படம் “பொய்க்கால் குதிரை”. இத்திரைப்படத்தை பாலச்சந்தர்தான் இயக்கியிருந்தார்.

அதுமட்டுமல்லாது “பொய்க்கால் குதிரை” படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின்போது பாலச்சந்தரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டாராம் வாலி. இத்தகவலை தனது வீடியோ ஒன்றில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில்  பகிர்ந்துகொண்டார்.

Published by
Arun Prasad