ஒய் பிளட்.. சேம் பிளட்.. பிரபுதேவா - வடிவேல் காம்போவில் முழுசா ரெடியான பேங் பேங்!..
இந்தியன் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள “பேங் பேங்” திரைப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. KRG கண்ணன் ரவி தயாரிப்பிலும், தீபக் ரவி இணைத் தயாரிப்பிலும் உருவாகி வரும் இப்படம், தற்போது தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபு தேவா – வடிவேலு காம்போ மீண்டும் இணைவது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் ஜோம்பி பின்னணியில் ஆக்ஷன், ஹாரர் மற்றும் காமெடி அம்சங்களுடன் இப்படம் உருவாகி வருவது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களை முழுமையாக மகிழ்விக்கும் வகையில் ஒரு வித்தியாசமான கமர்ஷியல் என்டர்டெய்னராக படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் முக்கிய பகுதிகள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மலேசியாவில் நடைபெற்ற 10 நாள் படப்பிடிப்பில் பல பிரமாண்ட காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தோனேசியாவின் புகழ்பெற்ற Mount Bromo எரிமலைப் பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பு காட்சிகள் படத்தின் முக்கிய ஹைலைட்டாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியான “பேங் பேங்” டைட்டில் டீஸர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜோம்பிகளால் சூழப்பட்ட நிலையில் பிரபு தேவா மற்றும் வடிவேலு துப்பாக்கியுடன் மாஸாக தோன்றிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் “பிரபு வேலு”, “வடி தேவா” போன்ற ரசிகர்களின் நகைச்சுவை பதிவுகளும் இணையத்தில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் எழுதி இயக்கி வருகிறார். ஹாரர் அட்வென்ச்சர் பாணியில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவை H.C. வேணு கவனிக்க, சண்டைக் காட்சிகளை சுரேஷ் வடிவமைத்துள்ளார். படத்தொகுப்பை ஆண்டனி மேற்கொண்டு வருகிறார். கலை இயக்கத்தை டான் பாலா செய்துள்ளார்.
மேலும், ‘அனிமல்’ திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற Sync Cinema நிறுவனம் இப்படத்தின் சவுண்ட் டிசைன் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சவுண்ட் மிக்சிங்கை தெலுங்கானா மாநில விருது பெற்ற அரவிந்த் மேனன் கவனித்துள்ளார். நடிகர் பப்லு பிரித்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தொடர்ந்து வெளியாக உள்ள அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
