எனக்கு என் தேவா தான் முக்கியம்!.. அதிரடி பட விழாவில் மாஸ் காட்டிய சிஎஸ்கே வீரர் சஞ்சு சாம்சன்!..
மலையாளத்தில் இந்த வாரம் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வரும் அதிரடி திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பு வரும் மே 22 ஆம் தேதி தமிழ்நாட்டில் வெளியாக உள்ள நிலையில், அதன் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டுள்ளனர். கூடவே சிஎஸ்கே வீரர் சஞ்சு சாம்சனின் வருகை விழாவை பிரம்மாண்டமாக்கியது.
இயக்குநர் அருண் அனிருதன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விழாவில் பேசிய இயக்குநர் அருண் அனிருதன், “அதிரடி” என்ற தலைப்பை பசில் ஜோசப் தான் பரிந்துரைத்ததாக தெரிவித்தார். மேலும், கல்லூரி பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் ரசிகர்களையும் கவரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
எழுத்தாளர் பால்சன் ஸ்கரியா பேசுகையில், மலையாளத்தில் வெற்றி பெற்றுள்ள இந்தப் படம் தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெறும் என கூறினார். தமிழ் ரசிகர்களுக்கேற்ற வகையில் வசனங்கள் கவனமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நடிகர் பசில் ஜோசப், இந்தப் படத்திற்கு தமிழில் தானே டப்பிங் செய்ததாக கூறி, தமிழ் ரசிகர்களின் அன்பு எப்போதும் தனித்துவமானது என பாராட்டினார். மேலும், “அதிரடி” படம் முழுக்க முழுக்க குடும்பம் ரசிக்கும் பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், சென்னை தற்போது தனது இரண்டாவது வீடாக மாறிவிட்டதாக கூறினார். சி.எஸ்.கே அணியில் இணைந்த பிறகு ரசிகர்களின் அன்பும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், சென்னை உணவுகள் மிகவும் பிடிக்கும் என்றும் சமீபத்தில் நாயர் மெஸ்ஸில் சாப்பிட்ட அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
தனது நண்பன் பசில் ஜோசப் அழைத்த நிலையில், வராமல் எப்படி இருக்க முடியும் என்றும் சிறு வயது முதலே ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களின் படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். அதிரடி திரைப்படம் தமிழ் ரசிகர்களை கண்டிப்பாக கவரும் என்றார்.
