அரசியல் ஒரு கிரிக்கெட் மேட்ச்.. விஜய் மட்டும் பத்தாது!.. வைரலாகும் வீடியோ.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி தற்போது தீவிர அரசியலுக்கு வந்து விட்டார். தவெக சார்பில் இரண்டு மாநாடுகளையும் நடத்தினார்கள். பேசும் மேடைகளில் திமுகவை விஜய் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். 2026 தேர்தலில் மக்கள் உங்களை தோற்கடிப்பார்கள் என்றெல்லாம் பேசி வருகிறார். அதோடு, தன்னால் திமுகவை தோற்கடிக்க முடியும் என அவர் நம்புகிறார்.
அதேநேரம் தற்போது வரை அவர் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கவில்லை. அவர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் திமுகவை தோற்கடிக்க முடியும் என அரசியல் விமர்சகர்கள் பலரும் பேசி வருகிறார்கள். அதிமுகவிலேயே சில அமைச்சர்கள் இதை சொன்னார்கள். ஆனாலும் விஜய் தனித்து நிற்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான பாரதி கண்ணன் சமீபத்தில் அளித்த பேட்டி தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அரசியல் என்பது ஒரு கிரிக்கெட் போலதான். விஜயின் தவெக ஒரு புது டீம். அதில் முக்கிய வீரராக விஜய் மட்டுமே இருக்கிறார். கிரிக்கெட் என்றால் 11 பேர் வேண்டும். எல்லோரும் நன்றாக ஆடவேண்டும். ஆனால் தவெகவில் விஜய் மட்டுமே இருக்கிறார். அவருக்கு பின்னாலோ ஆட அங்கே பேட்ஸ்மேன்கள் இல்லை.

தவெகவை ஒரு ஜிம்பாப்வே அணி என வைத்துக் கொள்வோம். ஆனால் இவர்களை எதிர்ப்பது ஆஸ்திரேலிய அணியை. அங்கு எல்லோரும் ஆல்ரவுண்டர்களாக இருக்கிறார்கள். நல்ல பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஜிம்பாப்வே கேப்டன் ஆஸ்திரேலியா கேப்டனை பார்த்து ‘நான் உன்னை தோற்கடித்து விடுவேன்.. உன்னை காலி செய்து விடுவேன்.. வா’ என்று கையை முறுக்குவது போல இருக்கிறது. இதை பார்க்கும்போது பக்குவம் இல்லாமல் இப்படி பேசுகிறாரோ எனத் தோன்றுகிறது.
ஐபிஎல் மேட்ச்சில் நடப்பது போல எல்லா அணிகளில் இருந்தும் நல்ல திறமையான விளையாட்டு வீரர்களை கொண்டுவந்து தனது அணியில் வைத்துக் கொண்டு எதிரியுடன் மோத வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம். பொதுவாகவே சினிமாவில் யாரும் மற்றவர்கள் பேச்சைக் கேட்க மாட்டார்கள். அவர்கள் ஹீரோவாக நடித்தவர்கள். தான் நினைப்பதே சரி என நினைப்பார்கள்’ என பேசியிருக்கிறார். இந்த வீடியோவை விஜயை பிடிக்காதவர்களும், திமுகவினரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
