Categories: Cinema News latest news

நான் தவறே செய்யவில்லை…ஆனால்!… 5 வருடங்களுக்கு பின் மனம் திறந்த பாவனா….

மலையாளம் மற்றும் சில தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பாவனா.. கடந்த 2017ம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பாவனாவை சிலர் காரில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக செய்திகள் வெளியாகி தமிழ் மற்றும் மலையாள சினிமா உலகினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

இதில், மலையாள நடிகர் திலீப் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 84 நாட்கள் சிறையில் இருந்த அவர் அதன்பின் ஜாமினில் வெளியே வந்தார்.

தற்போதும் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. மலையாள இயக்குனரும், திலீப்பின் நண்பருமான பாலசந்திரகுமார் திலீப்புக்கு இந்த வழக்கில் தொடர்புள்ள ஆதாரங்களை வெளியிட்டு வருகிறார். எனவே, இந்த வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், 5 வருடம் கழித்து பாவனா இதுபற்றி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் ‘இது ஒரு சாதாரண பயணம் அல்ல. பாதிக்கப்பட்டவராக இருந்து மீண்டும் வந்த ஒருவரின் பயணம். கடந்த 5 வருடங்களாக என் மீது குற்றம் சாட்டி என் அடையாளங்கள் அழிக்க முயன்றனர். நான் தவறே செய்யவில்லை என்றாலும் என்னை அவமானப்படுத்தவும், அமைதியாக்கவும், தனிமைப்படுத்தவும் பல முயற்சிகள் நடந்தன.

ஆனாலும், என் குரலை உயிர்ப்பிக்க சிலர் முன் வந்தனர். இப்போது எனக்காக பேசும் சில குரல்களை கேட்கும்போது இந்த போரில் நான் தனியாக இல்லை என உணர்கிறேன். தப்பு செய்தவர்கள் தண்டனை பெறுவதற்கும், எனக்கு நியாயம் கிடைப்பதற்கும், வேறு யாரும் இதை சந்திக்க கூடாது என்பதற்காகவும் இந்த பயணத்தை நான் தொடர்வேன். என்னுடன் துணை நின்ற அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றியும் அன்பும்’ என பதிவிட்டுள்ளார்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா