Connect with us

Bigg Boss

அண்ணா, கண்ணதாசன் நட்பில் பிளவு… வாய்ப்பு வரவும் ‘நச்’சுன்னு கவிஞர் கொடுத்த பாடல்!

கண்ணதாசன், அண்ணா இருவரும் நெருங்கிய நண்பர்கள். அப்போது அதாவது 60களில் திமுகவில் இருந்தார் கண்ணதாசன். அவர்கள் அண்ணன், தம்பி போல பழகி வந்தனர்.

பல மேடைகளில் ஒன்றாக இருந்த அவர்களுக்குள் திடீர் என பிளவு வந்து விட்டது. கண்ணதாசனின் மனதில் அண்ணா செய்த செயல்கள் யாவும் ஆழமாக பதிந்து விட்டன. அது மனதைப் பாதித்தன. நேரம் கிடைக்கும்போது அதைக் கொட்டி விட நினைத்தார். நேரமும் வந்தது. அதுதான் சிவாஜி நடித்த படித்தால் மட்டும் போதுமா. அந்தப் படத்தில் ஒரு சிச்சுவேஷன்.

அண்ணன் பாலாஜி, தம்பி சிவாஜிக்கு ஒரு துரோகம் செய்கிறான். இதை நினைத்து தம்பி மனம் உடைகிறான். ஆனால் நடந்த உண்மையை வெளியில் சொல்ல முடியாத நிலை. இதுதான் சிச்சுவேஷன். அண்ணா பாட்டு எழுதுங்கன்னு கண்ணதாசனைப் பார்த்து மெல்லிசை மன்னர் எம்எஸ்வி. சொல்கிறார்.

கண்ணதாசனுக்கு இந்த சிச்சுவேஷன் அல்வா சாப்பிடுவது போல இருந்தது. இத்தனை நாளா இதற்காகத் தானே காத்திருந்தேன் என்பதைப் போல அவர் தனது கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டார். மனதில் இருந்த காயத்தை ஆற்றும் வேகத்தில் அந்த சந்தர்ப்பத்தை அருமையாகப் பயன்படுத்திக் கொண்டார். அதுதானே கவிஞன். என்ன பாட்டுன்னு பாருங்க.

‘அண்ணன் காட்டிய வழியம்மா, இது அன்பால் விளைந்த பழி அம்மா. கண்ணை இமையே பிரித்ததம்மா – என் கையே என்னை அடித்ததம்மா…’ என்று பேனாவால் அண்ணாவை அடித்தார்.

அது மட்டும் அல்லாமல், ‘அவனை நினைத்தே நான் இருந்தேன். அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான். இன்னும் அவனை மறக்கவில்லை. அவன் இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை’ என்று தன்னிலை விளக்கமும் அதே பாடலில் கொடுத்தார்.

அந்தப் பாடலை அண்ணாவிடம் போட்டுக் காட்டினர் சிலர். இருவர் பகையில் நாமளும் குளிர் காயலாமே என்ற நப்பாசையில் அவர்கள் வந்ததை அண்ணா புரிந்து கொண்டார். அதனால் விடுய்யா. என்னை அவர் நல்ல தமிழில் தானே திட்டுகிறார். திட்டி விட்டுப் போகிறார். விட்டு விடுங்கள் என்றாராம்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Bigg Boss

To Top