Categories: Cinema News latest news

மாநாடு படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி! – இந்தா ஆரம்பிச்சிட்டாங்கல்ல!….

திரைப்படங்களில் ஏதேனும் ஒரு காட்சி அல்லது வசனத்தை தேடிப்பிடித்து அது தங்களைத்தான் குறிக்கிறது என அரசியல் செய்யும் பழக்கம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் படமும் இப்படி ஒரு பிரச்சனையை சந்தித்தது. இது தொடர்பாக சூர்யா மற்றும் அப்பட இயக்குனர் ஞானவேல் ஆகியோர் விளக்கமளித்தும் இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. தற்போது இந்த பிரச்சனையை மாநாடு படமும் சந்தித்துள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து கடந்த 25ம் தேதி வெளியான திரைப்படம் மாநாடு. இப்படத்தில் சிம்பு இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். மேலும், இப்படத்தில் வெடிகுண்டு மற்றும் முதல்வரை கொலை செய்வது என பல காட்சிகள் வருகிறது. அதோடு, ‘அமெரிக்காவில் குண்டு வெடித்தால் ஒரு சைக்கா இதை செய்துவிட்டான் எனக்கூறுகிறார்கள்.

ஆனால், இந்தியாவில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தால் முஸ்லீம்கள்தான் இதற்கு காரணம் எனக்கூறுகிறார்கள். ஒரு மதத்தை எத்தனை வருடம்தான் இழிவாக பேசுவீர்கள்’ என சிம்பு பேசுவது போல் ஒரு வசனமும் வருகிறது. இப்படம் இந்து – முஸ்லீம் மத நல்லிணக்கத்தை பேசுவதாக வெங்கட்பிரபுவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், மாநாடு படம் இந்து, முஸ்லீம் ஒற்றுமையை சீர் குலைக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட வேண்டும்… சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும்’ என வேலூரை சேர்ந்த பாஜக பிரமுகர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இந்து – முஸ்லீம் நல்லிணக்கத்திற்கு எப்போதும் எதிரானவர்கள் பாஜகவினர். எனவே ஒரு முஸ்லீம் மதத்தை சேர்ந்தவரை வைத்து இப்படி பிரச்சனை செய்ய துவங்கிவிட்டார்கள் என சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா