×

கேப்டன் பிரபாகரன் வெளியாகி 30 ஆண்டுகள் - மீண்டும் வருமா அப்படி ஒரு திரைப்படம்?.....

 
கேப்டன் பிரபாகரன் வெளியாகி 30 ஆண்டுகள் - மீண்டும் வருமா அப்படி ஒரு திரைப்படம்?.....

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் மன்னனாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவரின் 100வது திரைப்படம் கேப்டன் பிரபாகரன். அவரின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தார் தயாரிப்பில் 1991ம் ஆண்டு ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று இத்திரைப்படம் வெளியானது. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்தார். 1990ம் வருடம் விஜயகாந்தை வைத்து புலன் விசாரணை என்கிற திரைப்படத்தை ஹாலிவுட் படம் போல் இயக்கி அசத்தியிருந்தார். அடுத்த ஆண்டு வெளியான திரைப்படம் கேப்டன் பிரபாகரன். இன்றோடு இப்படம் வெளியாகி சரியாக 30 ஆண்டுகள் ஆகிவிட்டது.  விஜயகாந்த், ஆர்.கே.செல்வமணி, இளையராஜா காம்பினேஷனில் உருவான இப்படத்தை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. வசூலிலும் படம் சூப்பர் ஹிட்.

மறைந்த சந்தன கடத்தல் வீரப்பன் பற்றிய கதை. காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் உதவியின்றி வீரப்பனால் செயல்பட முடியாது என தைரியமான கருத்தை முன் வைத்த திரைப்படம். காவல்துறை அதிகாரியாக விஜயகாந்த். வசன கர்த்தா லியாகத் அலிகானின் அனல் பறக்கும் வசனங்கள், அதிரடி சண்டை காட்சிகள் என தமிழ் ரசிகர்கள் மிரண்டு போன திரைப்படம். இப்படத்தில் வெறும் 2 பாடல்கள் மட்டுமே என்றாலும் முத்தான பாடல்கள். அதிலும், ரம்யா கிருஷ்ணனின் அசத்தல் நடனத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடல் செம ஹிட். எங்கு திரும்பினாலும் அப்பாடல் ஒலித்தது. ஆர்கெஸ்ட்ரா, நடன நிகழ்ச்சி எனில் இந்த பாடல் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். 

இப்படத்தில் வில்லனாக அறிமுகமானவர்தான் மன்சுர் அலிகான். அசத்தலான, அலட்டான வில்லனாக நடிப்பில் அசத்தியிருந்தார். அவரை போன்ற வில்லனை அதற்கு முன்பு தமிழ் ரசிகர்கள் பார்த்திருக்கவில்லை என்பதால் அவரின் நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தன்னை வில்லனாக அறிமுகப்படுத்தியவர் விஜயகாந்த் என்பதால் இப்போதும் மன்சூர் அலிகானுக்கு விஜயகாந்த் மீது மரியாதை உண்டு.  அதேபோல், இப்படத்தில் சரத்குமாரை முக்கிய வேடத்தில் விஜயகாந்த் நடிக்க வைத்தார். இப்படத்தில் நடித்த பின்னரே விஜயகாந்துக்கு ‘கேப்டன்’ என்கிற பெயர் நிலைத்துப்போனது. 

இப்படம் வெளியாகி தமிழகமெங்கும் வசூலில் சக்கை போடு போட்டது. பல தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது. சில தியேட்டர்களில் வெள்ளி விழாவையும் கொண்டாடியது.  30 வருடங்களுக்கு முன்பு வெளியான கேப்டன் பிரபாகரன் போல் ஒரு திரைப்படம் தற்போது வரை கூட வெளியாகவில்லை.

தமிழ் சினிமா வரலாற்றில் சில திரைப்படங்கள் மட்டும் ரசிகர்கள் நினைவில் நிலைத்திருக்கும். 

‘கேப்டன் பிரபாகரன்’அப்படி ஒரு திரைப்படம்....
 

From around the web

Trending Videos

Tamilnadu News