ரெட் சிக்னல் போட்ட சென்சார் போர்டு... சென்சிட்டிவ் இயக்குனரின் அடுத்த சர்ச்சை

தெலங்கானா மாநிலத்தை உலுக்கிய சம்பவம் `திஷா பாலியல் வன்கொடுமை’ வழக்கு. ஹைதராபாத் புறநகரான ஷம்சதாபாத் பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு பெண் டாக்டர் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளிகளை தெலங்கானா போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா திஷா என்கவுண்டர் என்ற பெயரில் படமெடுத்திருக்கிறார். இந்தப் படத்தை ராம்கோபால் வர்மா மேற்பார்வையில் ஆனந்த் ஷர்மா என்பவர் இயக்கியிருந்தார். இந்தப் படம் இந்த மாதம் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தை ரிலீஸ் செய்வதில் புதிய சிக்கல் எழுந்திருக்கிறது. படத்தைப் பார்த்த ஹைதராபாத் சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு தடையில்லா சான்று வழங்க மறுத்திருக்கிறார்கள். சென்சிட்டிவான விவகாரம் பற்றி படம் பேசுவதால், அதற்கு ஒப்புதல் கொடுக்க அதிகாரிகள் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், படத்தை மறு ஆய்வு செய்யும் குழுவுக்கு அனுப்பிவிட்டு, அதன் முடிவுக்காகப் படக்குழு காத்திருக்கிறது. இதனால், படம் சொன்ன தேதியில் வெளியாகுமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் டோலிவுட் வட்டாரத்தில்.